தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: கைதான யூடியூபர் மாரிதாஸ் விடுவிப்பு

37


கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக, சென்னை நீலாங்கரை வீட்டில் வைத்து மதுரையை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.


கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பி வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தும் வருகின்றனர்.


அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக யூடியூபர் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் இன்று (அக் 04) காலை மதுரை கோமதிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

ஆனால் அங்கு அவர் இல்லை. பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் தரப்பட்டுள்ளது.

Advertisement