விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்

11

தூத்துக்குடி: விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவர பாஜ முயற்சி செய்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


திருச்செந்தூரில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று அவர் கேட்டார். அதனால் பாதுகாப்பு கொடுத்து இருக்கின்றனர். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் கேட்டாலும் கொடுக்கப் போவதில்லை. ஏற்கனவே விஜய்க்கு அண்ணாமலைக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கின்றனர். கரூர் சம்பவத்தில் மக்களுக்குத் தான் பாதிப்பு விஜய்க்கு பாதிப்பு இல்லை.

கூட்டம் நடத்துங்க!





ஒரு இடத்தை வாங்கி கூட்டம் நடத்தி இருக்கலாம் தெருக்களில் பிரசாரத்திற்கு செல்லும் போது நெரிசல் ஏற்படத்தான் செய்யும். இது மாதிரியான பிரசாரங்களை எல்லோரும் மாற்றிக் கொள்வது நல்லது தான். மேலை நாடுகள் போல் அறிவித்து ஒரு குறிப்பிட்ட நேரம் தலைவர்கள் பேச அனுமதி வழங்கலாம். யாருடையது ஏற்புடையது என்பது குறித்து மக்கள் வாக்களிப்பார்கள். பாஜ விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது. அது கட்சியின் முடிவு. விஜய் கரூருக்கு வந்ததால் தான் அந்த கூட்டம். அதனால் அந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். பழியை போலீசார், அரசு ஏற்க வேண்டும் என்று, எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்வதால் தான் சிக்கல் வருகிறது.

கொடுமை





மாறி மாறி ஒருத்தருக்கு ஒருவர் பழி போட்டுக் கொள்வது உயிரிழப்பை விட கொடுமையாக உள்ளது. விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவர பாஜ முயற்சி செய்கிறது. விஜய்க்கு ஆதரவாக செயல்படுகிறது. விஜய் மாநாடு நடத்துவது வரை நாங்கள் வாழ்த்தினோம். அதில் கொடுமை என்னவென்றால் தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று என்று சொல்வது போல் இருந்ததால் எதிர்த்தோம். தமிழர் பிரதமர் ஆவது அரசியலமைப்பில் வாய்ப்புள்ளது. எதார்த்தத்தில் இல்லை. தமிழர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பத்து ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.

சுழற்சி முறையில் பதவி




மன்மோகன்சிங், சிதம்பரம் இரண்டு பேருமே பொருளாதாரம் படித்தவர்கள். 5 வருடம் சிதம்பரத்தையும், 5 வருடம் மன்மோகன் சிங்கையும் பிரதமராக ஆக்கி இருக்கலாம். காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. நரசிம்மராவ், தேவகவுடாவுக்கு பிரதமர் பதவி கொடுத்தார்கள். மலையாளி மற்றும் தமிழனுக்கு மட்டும் கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும், ஜனாதிபதி போன்ற பதவிகள் தான் கொடுப்பார்கள். அதற்கு ஒரு காலம் வரும். எதிர்காலத்தில் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை கொண்டு வர வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement