அமைதிக்கான நோபல் பரிசு அக்.,10ல் அறிவிப்பு; அடம் பிடிக்கும் டிரம்ப் என்ன செய்யப் போகிறார்?

வாஷிங்டன்: எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெறுகிறது. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப். 'இதுவரை ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். எனக்கு கட்டாயம் நோபல் பரிசு தர வேண்டும்' என்கிறார் அவர். 'எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்' என்றும் சொல்லிவிட்டார்.
இப்படி நேரடியாகவே நோபல் பரிசு கேட்பதுடன், தனக்காக அந்த பரிசை வழங்கும்படி பிரசாரம் செய்வதற்காக மறைமுகமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதனால் இந்தாண்டு நோபல் அமைதிப்பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்படி முடிவு செய்யப்படுகிறது அமைதிக்கான நோபல் பரிசு? முழு விபரம் இதோ!
மற்ற துறைகளில் வழங்கப்படும் நோபல் பரிசுகள் அனைத்தையும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் செயல்படும் துறை சார்ந்த பரிசுக் குழுவினர் முடிவு செய்கின்றனர். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டு பார்லிமென்ட் குழுவினரால் முடிவு செய்யப்படுகிறது.
நோபல் அமைதி பரிசுக்கான விண்ணப்பங்கள் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி. பார்லிமென்ட் உறுப்பினர்கள், சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள், பல்கலை பேராசிரியர்கள், ஏற்கனவே நோபல் பரிசு பெற்றவர்கள், யாருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று பரிந்துரைத்து விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட அந்தக் காலக்கெடுவுக்குள் 338 விண்ணப்பங்கள் நோபல் பரிசு கோரி வழங்கப்பட்டன. இதில், அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நோபல் பரிசு கோரி வழங்கப்பட்டுள்ள 94 விண்ணப்பங்களும் அடங்கும்.
இந்த விண்ணப்பதாரர் பட்டியலில் யார் யார் பெயர்கள் இருக்கின்றன என்பதை நோபல் பரிசு குழு வெளிப்படையாக அறிவிப்பதில்லை.
டிரம்ப் குறிப்பிடும் ஏழு போர் நிறுத்தங்களும், ஜனவரி 31ம் தேதிக்கு பின்னர் நடந்தவை. எனவே அடுத்தாண்டு நோபல் பரிசுக்கு வேண்டுமானால் அவரை பரிசீலிக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான கிளாடியா டென்னி என்பவர் ஒவ்வொரு ஆண்டும் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, டிரம்புக்கு நோபல் பரிசு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறார். எனவே இவர் சார்பில் ஜனவரி 31ம் தேதிக்கு முன்னதாகவே விண்ணப்பம் கொடுத்திருக்கிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
அந்த விண்ணப்பத்துக்கு வலு சேர்க்கும் வகையில் தான், டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும் அவரது பெயர் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.
யாருக்கு வாய்ப்பு?
நார்வே நாட்டைச்சேர்ந்த ஆஸ்லோ அமைதி ஆய்வு நிறுவனம், யாருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஒரு பட்டியலை தயார் செய்துள்ளது. அதன்படி பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த கண்காணிப்பு குழு, சூடான் நாட்டில் செயல்படும் தன்னார்வ மீட்புக் குழுவினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் டிரம்ப் இல்லை.
ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி நவல்னி என்ற எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார்.
அவரது மனைவி யூலியா, பரிசுக்கு தேர்வு செய்யப்படும் பட்டியலில் இருப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்ன செய்வார் டிரம்ப்?
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர் பெயர் அக்டோபர் 10ல் அறிவிக்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது, தனக்கு பரிசு கிடைக்காவிட்டால் டிரம்ப் எப்படி அந்த செய்தியை எதிர்கொள்வார் என்று உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது.



மேலும்
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; பயணிகள் பலர் படுகாயம்!
-
இந்தியா எனக்கு கோவில் போன்றது; பாக்., கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம்
-
நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்
-
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி
-
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு