'கோட்டா சிஸ்டம்' பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி

2


விண்ணப்பப் படிவம் வழங்கி, நேர்காணல் நடத்தி, மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதால், தமிழக காங்கிரசில் உள்ள கோஷ்டி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தி.மு.க., -- அ.தி.மு.க.,வை பின்பற்றி, காங்கிரசில் உள்ள 77 மாவட்டங்களை, தலா 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டத் தலைவர் என பிரித்து, 115 பேரை நியமிக்க, அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

போட்டியிட வாய்ப்பு





இதற்கான செயல் திட்டங்கள் வகுத்து, டில்லி தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, டில்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

தேர்தலுக்கு தேர்தல் கோஷ்டி தலைவர்கள், தங்கள் ஆதரவாளர்களுக்கு, 'சீட்' வாங்கி கொடுப்பது வழக்கம். பணம் படைத்தவர்கள், கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும், காங்கிரசில் மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

இனிமேல் அப்படி தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை. கட்சி அமைப்பு ரீதியாக பணியாற்றியவர்களுக்கும், தகுதி படைத்தவர்களுக்கும் தான் 'சீட்' வழங்க வேண்டும் என, டில்லி மேலிடம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

பொருளாதார வசதி இல்லாத சாமானியனும் போட்டியிடும் வகையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம், மாவட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதாவது, சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில், மாவட்ட தலைவர்களும் இடம்பெற உள்ளனர். எனவே, சட்டசபை தேர்தலுக்கு முன், புதிய மாவட்டத் தலைவர்களை நியமனம் செய்ய திட்ட மிடப்பட்டு உள்ளது.

இதற்காக, 71 பேர் பிரதிநிதிகள் அடங்கிய பட்டியலை, கட்சி மேலிடம் தயாரித்துள்ளது. அப்பட்டியலில் உள்ள டில்லி பிரதிநிதிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தமிழக மாவட்டங்களுக்கு சென்று, விண்ணப்ப படிவங்களை கட்சியினரிடம் வழங்கி, மாவட்ட தலைவர் தேர்வு நடத்த உள்ளனர்.

பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூவரை தேர்வு செய்து, டில்லிக்கு பரிந்துரைப்பர்.

11 வகையான தகவல்கள்

அதில், தகுதியான ஒருவரை மாவட்டத் தலைவராக, டில்லி மேலிடம் அறிவிக்கும். விண்ணப்ப படிவம், நேர்காணல் முறையில், மாவட்டத் தலைவர் தேர்வு செய்யப்படுவதால், நீண்ட காலமாக கட்சியில் நீடித்த, கோஷ்டி தலைவர்களுக்கான 'கோட்டா சிஸ்டம்' ஒழிக்கப்படும் நிலை வந்துள்ளது. இதனால் கோஷ்டி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், மாவட்டத் தலைவர் தேர்வுக்காக, டில்லி மேலிடம் ரகசியமாக தயார் செய்திருந்த விண்ணப் படிவம் நேற்று, 'லீக்' ஆனது. அந்த விண்ணப்ப படிவத்தில், 11 வகையான தகவல்கள் கேட்கப்பட்டு உள்ளன.

'இதற்கு முன் ஏதேனும் தேர்தலில் போட்டியிட்டீர்களா; உங்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன; கட்சி உங்களை ஏற்கனவே நீக்கியுள்ளதா' என்பது போன்ற கேள்விகள், அதில் இடம் பெற்றுள்ளன.




- நமது நிருபர் -

Advertisement