நடிகை விஜயலட்சுமி உடன் சமரசம்: சீமானுக்கு நிம்மதி!

30


புதுடில்லி: சீமான், விஜயலட்சுமி இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கோரிய நிலையில், வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவருக்கு எதிராக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ''நடிகை விஜய லட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், சீமானை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து செய்யப்படும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.



இந்நிலையில் இன்று (அக் 08) நடிகை குறித்து அவதூறு பேசிய வழக்கில் சீமான் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ''நடிகை விஜயலட்சுமிக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுகிறேன். அவ்வாறு கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அவருக்கு ஏற்பட்ட வலி, மன உளைச்சலுக்கு மனதார வருந்துகிறேன். நடிகை விஜயலட்சுமி குறித்து எந்த அவதூறு கருத்தையும் கூற மாட்டேன்,'' என பிரமாண பத்திரத்தில் சீமான் உறுதி அளித்துள்ளார்.


அதேபோல், ''நான் சீமானால் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனது வாழ்வாதாரத்துக்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என சுப்ரீம் கோர்ட்டில் விஜயலட்சுமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், சீமான், விஜயலட்சுமி இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கோரிய நிலையில், வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் பாலியல் புகார் வழக்கில் இருந்து சீமானுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

Advertisement