ஸோகோ இமெயிலுக்கு மாறினார் அமித்ஷா: நன்றி தெரிவித்தார் ஸ்ரீதர் வேம்பு

13

புதுடில்லி: ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்காக அந்த நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விதிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த தயாரிப்புகளுக்கு மாற்றாக இந்திய தயாரிப்புகளை பயன்படுத்த நமது நாட்டினர் துவங்கி உள்ளனர். அந்த வகையில், ஸோகோ நிறுவனத்தின் மீது இந்தியர்களின் கவனம் திரும்பி உள்ளது. அந்த நிறுவனத்தின் ஸோகோ இமெயில், அரட்டை செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, டாக்குமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட்ஸ் மற்றும் பிரசன்டேஷன் தயாரிக்க மைக்ரோசாப்டுக்கு பதிலாக இந்திய தளமான ஸோஹோவுக்கு மாறியதாக அறிவித்து இருந்தார்.

மத்திய கல்வி அமைச்சகமும், அலுவலகத்தில் ஸோகோ தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.


இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ஸோகோ இமெயிலுக்கு மாறிவிட்டேன். எனது இமெயில் முகவரி மாற்றத்தை குறித்து கொள்ளுங்கள்.
எனது புதிய இமெயில் முகவரி amitshah.bjp@zohomail.in.


எதிர்காலங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு இந்த முகவரியை பயன்படுத்துங்கள். இந்த விஷயத்திற்கு கவனம் செலுத்தியதற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி



இதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி.
இந்த தருணத்தை ஸோகோவில் 20 ஆண்டுக்கும் மேலாக கடுமையாக உழைத்த எங்கள் பொறியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அவர்களுக்கு நம்பிக்கை இருந்த காரணத்தினால், இத்தனை ஆண்டுகள் அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்து இத்தனை ஆண்டுகள் உழைத்தனர். அவர்களின் நம்பிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த். ஜெய் பாரத். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement