இந்தியா, சிங்கப்பூர் பலப்பரீட்சை * ஆசிய கால்பந்து தகுதிச்சுற்றில்...

கல்லாங்: ஆசிய கால்பந்து தகுதிச்சுற்றில் இன்று இந்தியா, சிங்கப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இதுவரை முதல் இரு போட்டியில் தலா ஒரு டிரா (வங்கதேசம்), தோல்வியுடன் (ஹாங்காங்) 1 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் கடைசியாக உள்ளது. இன்று தனது மூன்றாவது போட்டியில் தரவரிசையில் 158 வது இடத்திலுள்ள சிங்கப்பூர் அணியை அதன் சொந்தமண்ணில் (கல்லாங்) சந்திக்க உள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தால் மட்டுமே ஆசிய கோப்பை செல்ல முடியும் என்ற நிலையில் இன்று இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தலைமையில் இந்திய அணி, சமீபத்திய நேஷன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது இடம் பெற்று அசத்தியது.
இது மீண்டும் தொடரும் பட்சத்தில் இன்று இந்தியா வெற்றிக்கு முயற்சிக்கலாம். ஆனால் இந்திய அணி வீரர்கள் பலர், பயிற்சி முகாமில் முறையாக பங்கேற்காதது ஏமாற்றம் தந்தது.
'சீனியர்' சுனில் செத்ரி அணிக்கு திரும்பியது, கன்ன எலும்பு முறிவில் இருந்து மீண்ட அனுபவ சந்தேஷ் ஜின்கன் இருப்பது பலம்.
சிங்கப்பூர் அணிக்கு பல்வேறு சர்வதேச லீக் தொடரில் பங்கேற்ற அனுபவம் வாய்ந்த இக் ஷான் பண்டி (41 போட்டி, 21 கோல்), 19 வயது ஜோனன் கைகொடுக்கலாம்.

யார் ஆதிக்கம்
இந்தியா, சிங்கப்பூர் அணிகள் 27 போட்டியில் மோதின. இந்தியா 12, சிங்கப்பூர் 11ல் வென்றன. 4 போட்டி 'டிரா' ஆகின.
* சொந்தமண்ணில் சிங்கப்பூர் அணி 8ல் வென்றது. இந்தியா 6ல் வென்றது. 1 போட்டி 'டிரா' ஆனது.

Advertisement