போலீஸ் பூத்துக்கு வந்த நாகப்பாம்பு

கோவை: காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்குவதற்காக கிராஸ்கட் ரோட்டின் நடுப்பகுதியில் போலீசாருக்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் போலீசார் பணிபுரிகின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், காந்திபுரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்குள்ள சிக்னல் நிழற்குடையின் அருகில் கல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அவ்வழியாக நடந்துசென்ற ஒருவர் பாம்பு ஒன்று அந்த கற்களுக்கு இடையே ஊர்ந்து செல்வதை பார்த்தார். பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் கற்களை அகற்றி பார்த்தபோது, ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்தது. அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை மத்திய சிறை வளாக பகுதியில் இருந்து பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement