வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார் தேஜஸ்வி

21

பாட்னா: பீஹாரில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.


பீஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நவ., 6ல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், நவ., 11ல் மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இவற்றில் பதிவாகும் ஓட்டுகள் நவ., 14ல் எண்ணப்படுகின்றன. இதனையடுத்து தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என கட்சிகள் மும்முரமாக உள்ளன.


இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் 'மகாபந்தன்' கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: பீஹாரை எப்படி முன்னேற்றப் போகிறோம் என மக்கள் கேட்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்யும் நிதீஷ்குமார் அரசு, வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதை உணரவில்லை.


ஐக்கிய ஜனதா தளமும், பாஜவும் வேலைவாய்ப்பு உறுதி வழங்காமல், அதற்கான நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றன. பீஹாரில் உள்ள அரசு வேலையில் இல்லாத குடும்பம் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதற்காக ஆட்சிக்கு வந்த 20 நாளில் புதிய சட்டம் கொண்டு வருவோம். 20 மாதங்களில், அரசு வேலையில்லாத குடும்பம் பீஹாரில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். தகவல் அடிப்படையில் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். இது எனது வாக்குறுதி. இதனை நிச்சயம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement