இது ஒரு சிறப்பான தருணம்; இஸ்ரேல் புறப்பட்ட டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டார். முன்னதாக, இது ஒரு சிறப்பான தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அக்.,10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போரை முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். அதன்படி, முதற்கட்டமாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய கூட்டம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று நடக்கிறது. போரின் முக்கிய மத்தியஸ்தர்களான எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் - சிசி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு எகிப்து செல்வதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த தருணத்தை எல்லோரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை. அனைவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இப்போது முதல் முறையாக, அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றுவது பெருமையளிக்கிறது. இதுவரை எப்போதும் நடந்திடாத ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும், எனக் கூறினார்.
தொடர்ந்து விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; இது நான் முடித்து வைக்கும் 8வது போராகும். தற்போது, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானுக்கு இடையே ஒரு மோதல் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் திரும்பி வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். ஏனெனில் நான் இப்போது மற்றொன்றைச் செய்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் போர்களைத் தீர்ப்பதில் நான் சிறப்பானவன்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலைப் பற்றி சிந்தியுங்கள். பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த சில போர்களைப் பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த ஒவ்வொரு மோதல்களையும், பெரும்பாலும் ஒரே நாளில், நான் தீர்த்துவைத்தேன். இது மிகவும் நல்லது. நோபல் பரிசுக்காக நான் இதைச் செய்யவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இதைச் செய்தேன்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட பல போர்களை நான் வரி விதிப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்த்தேன். உதாரணமாக, இந்தியா-பாகிஸ்தானிடம், 'நீங்கள் போர் செய்ய விரும்பினால், உங்களிடம் அணு ஆயுதங்கள் இருந்தால், நான் உங்கள் இருவர் மீதும் 100 சதவீதம், 150 சதவீதம், 200 சதவீதம் போன்ற வரை வரி விதிப்பேன்,' என்றேன். இதனால், அந்தப் பிரச்னை 24 மணிநேரத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. வரிவிதிப்பு இல்லையென்றால் அந்த போரை ஒருபோதும் தீர்த்திருக்க முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேலும்
-
தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு
-
ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்
-
வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்த சீனா; இறங்கி வந்தார் டிரம்ப்!
-
இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; சென்னையில் மருந்து ஆய்வாளர் வீட்டில் ரெய்டு
-
ஏ.ஐ., காரணமாக 20 லட்சம் பேர் வேலை பறிபோகக் கூடும்; நிடி ஆயோக் அறிக்கையில் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு