காசா அமைதி மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது சிறந்த முடிவு!

3

புதுடில்லி: எகிப்தில் நடந்த காசா அமைதி மாநாடு, டிரம்ப்பை புகழ்வது போலவும் நடந்ததாலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றதாலும் அம்மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது சிறந்த முடிவு என நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.


மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இஸ்ரேலும்  ஹமாசும் ஒப்புதல் அளித்துள்ளன. எகிப்தின் ஷர்ம் -எல் - ஷேக்கில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்சிசி இணைந்து தலைமை வகித்தனர். போரில் ஈடுபட்ட இஸ்ரேல், ஹமாஸ் பங்கேற்காத நிலையில், உச்சி மாநாடு பெரும்பாலும் போர் நிறுத்தத்தின் ஆரம்ப கட்டத்திற்கான அடையாள கையெழுத்து விழாவாகவே இருந்தது. மாநாட்டில் நடந்தவை பெரும்பாலும் டிரம்பை பற்றியதாக மட்டுமே இருந்தது.


இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பங்கேற்றார். இது குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், டிரம்ப்பை பற்றியதாக மட்டுமே இருந்த இம்மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது சிறந்த முடிவு என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இம்மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் டிரம்ப்பை, அனைத்து எல்லைகளையும் தாண்டிப் புகழ்ந்து தள்ளினார். இது அந்த மேடையில் இருந்தவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஷெபாஸ் ஷெரீப், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை டிரம்ப் தான் நிறுத்தினார். அவர் நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று முகஸ்துதி செய்தார்.


பாகிஸ்தான் பிரதமரின் பேச்சை அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு என்ற அளவுக்கு விமர்சித்தன. பாகிஸ்தானுடனான மோதலை நிறுத்தியதில் 3ம் நாட்டுக்கு எந்த பங்கும் இல்லை என இந்தியா உறுதிபட தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அம்மாநாட்டில் பங்கேற்று இருந்தால், அவருக்கு தர்மசங்கடமான சூழ்நிலையையே ஏற்படுத்தி இருக்கும். டிரம்ப்பின் தவறான வாதங்களைக் அவர் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும்.


பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு என பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பயங்கரவாதத்தை கைவிடும் வரை அந்நாட்டுடன் எந்த உறவும் இல்லை என தெரிவித்துள்ளது. இச்சூழ்நிலையில், இம்மாநாட்டில் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் மேடையில் இருந்த நிலையில், நமது பிரதமரும் மேடை ஏறுவது இந்தியாவின் தூதரக நிலைப்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது. மோடியையும், ஷெபாஸ் ஷெரீப்பையும் அருகருகே டிரம்ப் அழைத்து இருந்தால், அது இன்னும் தர்மசங்கடமான சூழ்நிலையையே ஏற்படுத்தியிருக்கும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.


ஆப்பரேஷன் சிந்தூர் முடிந்த நிலையில், கனடாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை, அமெரிக்கா வருமாறு அதிபர் டிரம்ப் அழைத்து இருந்தார். அந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரும் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது இருவரையும் அருகருகே நிற்க வைக்க டிரம்ப் ஏதாவது செய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால், குரோஷியா பயணம் முன்னரே திட்டமிட்டதால் அமெரிக்கா வர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துவிட்டார். தற்போது, மங்கோலியா அதிபர் இந்தியா வந்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு வலுவான காரணம் கிடைத்துள்ளது.

Advertisement