ஹெலிகாப்பட்டரில் எடுத்த படங்கள்! விற்றுத்தீர்ந்த பிரதிகள்!

'தினமலர்' நாளிதழ் 75 ஆண்டுகளைக் கடந்து இன்னமும் வாசகர்கள் மனதில் நங்கூரம் இட்டு நச்சென்று அமர்ந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும் பல நுாறாண்டுகள் மென்மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நாம் சிந்திப்பது எப்போதும் மிக உயர்வாக இருக்க வேண்டும். இது தனி மனிதனுக்கு மட்டுமல்ல; அனைத்து நிறுவனத்துக்கும் பொருந்தும். அதை அவ்வப்போது தினமலர் தன் உயர்வான சிந்தனைகளால் நிரூபித்து வருகிறது.
நானும் ஒரு பத்திரிகையாளன் என்பதால், ஒரு தகவலை இங்கே சொல்கிறேன். இந்தச் செய்தியை அடிக்கடி நினைத்து நினைத்து வியந்து போவேன் - இப்படியும் ஒரு நிறுவனம் சிந்திக்க முடியுமா என்று.
எம்.ஜி.ஆர்., அவர்கள் இறந்து போன சமயம். தமிழகமே சோகக் காடாக இருந்தது. ஆனால், நாளிதழ்கள் மட்டும் வழக்கமான பரபரப்பில் இருந்தன. எம்.ஜி.ஆர்., அவர்கள் இறந்த செய்தியை, இரங்கல் செய்திகளை, அரசியல் தலைவர்களின் அறிக்கைகளை, ரசிகர்களின் குமுறல்களை செய்தியாக்குவது ஒரு பக்கம். எல்லா நாளிதழ்களுமே இதை செய்யும்.
எதில் வித்தியாசம் காட்ட முடியும் என்றால், எம்.ஜி.ஆர்., தொடர்பான புகைப்படங்களை வெளியிடும்போது பிரமிப்பைக் கூட்ட முடியும். எம்.ஜி.ஆர்., அவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது, எல்லா பத்திரிகைகளின் புகைப்படக்காரர்களும் புகைப்படம் எடுப்பார்கள். அதையே சற்று வித்தியாசமாக எப்படி எடுக்கலாம் என்று தினமலர் தீர்மானித்தது, இன்றைக்குப் பலராலும் யோசிக்க முடியாத ஒன்று.
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடக்கிறபோது அதை வித்தியாசமான கோணத்தில் புகைப்படம் எடுத்து நாளிதழில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். எப்படி தெரியுமா?
ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தார்கள், அதில் தேர்ந்த புகைப்படக்காரரை அமர்த்தினார்கள். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் செல்லும் பிரதான சாலையின் மேலே அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. அதில் இருந்தபடியே பல்வேறு கோணங்களில் பிரமிக்க வைக்கும் காட்சிகளை படமாக்கினார்கள்.
இந்தக் கோணத்தில் புகைப்படம் எடுக்கலாம் என்று மற்ற பத்திரிகைகள் முடிவெடுத்தாலும், ஹெலிகாப்டர் வாடகை தொகையை உத்தேசித்து அதைக் கைவிட்டிருக்கலாம். ஆனால், தினமலர் துணிந்து இறங்கியது. ஸ்பெஷல் எடிஷனாக இந்தப் புகைப்படங்கள் அடங்கிய பேப்பர் சுடச் சுட விற்பனைக்கு வந்தது. கடைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மொத்த பேப்பர்களும் விற்பனையாகி, மீண்டும் அச்சானது. அப்போது இது பலராலும் வியந்து பேசப்பட்டது; பாராட்டப்பட்டது.
செய்திகளை முந்தித் தருவது மட்டுமல்ல பத்திரிகைகளின் பணி... மாணவர்களை கல்வித் திறனில் மேம்படச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல காலங்களாக உழைத்து வருகிறது. மாணவ சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயார் செய்வது, 'நீட்' தேர்வுக்குத் தயார் செய்வது என்று இன்ன பிறவற்றிலும் கவனம் செலுத்தி வருவது அடுத்த தலைமுறையை செவ்வனே கொண்டு வர வேண்டும் என்கிற அக்கறை தென்படுகிறது.
முதன் முதலாகப் பள்ளிக்குச் செல்ல இருக்கும் குழந்தைகளுக்கு சான்றோர்களைக் கொண்டு 'அட்சர அப்பியாசம்' என்று எழுத்துப் பயிற்சியை தினமலர் இன்று பல பள்ளிகளிலும் நடத்தி வருவது கவனிக்க வேண்டிய ஒன்று.
இன்றைக்கு ஆன்மிகம் தொடர்பான பல செய்திகளை 'தினமலர்' வெளியிடுகிறது. எந்த மதத்திற்கு எந்த ஜாதிக்கு என்று இல்லாமல் எல்லோரும் படித்து பலன் பெறும் வகையில் செயல்படுகிறது தினமலர்.
மீண்டும் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். மென்மேலும் வளர பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
ஆன்மிக எழுத்தாளர்/ சொற்பொழிவாளர்
மேலும்
-
குஜராத் அமைச்சரவை நாளை விரிவாக்கம்: அனைத்து அமைச்சர்களும் இன்று ராஜினாமா!
-
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
-
தெலுங்கானா முதல்வருக்கு எதிரான அவதுாறு: பெண் பத்திரிகையாளர்களை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
-
இந்திய நுகர்வோரின் நலனே முக்கியம்: டிரம்ப்புக்கு மத்திய வெளியுறவுத்துறை பதில்
-
சுதேசி சமூக வலைதளம் அரட்டை செயலியில் தினமலர் பக்கத்தை பாலோ செய்யுங்கள் வாசகர்களே!