‛நிறைய எழுது; படிப்பிலும் கவனம் செலுத்து' என்று என் வாழ்வை வளமாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்

‛பவள விழா' ஆண்டில் பாதம் பதிக்கும் ‛தினமலர்' நாளிதழுக்கு என் வாழ்த்துக்கள். தினமலர் நாளிதழுடன் என் தொடர்பு 58 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதில் எனக்கு தனிப்பெருமை உண்டு!

நான் திருநெல்வேலியில் பட்டப்படிப்பு பயின்றபோது எழுதி அனுப்பியிருந்த ‛வஞ்சம்' தலைப்பிலான சிறுகதையை, மார்ச் 10, 1968 தேதியிட்ட ஞாயிறு மலரில் பிரசுரித்து எனக்கு பெருமை அளித்தவர் தினமலர் நிறுவனரான என் மதிப்பிற்குரிய டி.வி. ராமசுப்பையர்!

சந்திக்க சென்றபோது, ‛நிறைய எழுது' என்றார்; கூடவே, ‛படிப்பிலும் கவனம் செலுத்து' என்றார். அவரை சந்தித்த அனுபவத்தை நண்பர்களிடமும், பெற்றோரிடமும் பகிர்ந்தபோது, ‛நீ அதிர்ஷ்டசாலி' என்றனர். அந்த பெரியவர் விதைத்த தினமலர் விதை, இன்று பல விழுதுகளுடன் பிரமாண்ட ஆலமரமாய் வேரூன்றி இருப்பதில் மிகவும் மகிழ்கிறேன்.

இன்றளவும் தினமலர் நாளிதழில் எழுத்து பங்களிப்பு செய்து என் உறவை வலுப்படுத்திக் கொண்டு வருகிறேன். இத்தருணத்தில் நம் நாளிதழின் ஆசிரியர், வெளியீட்டாளர், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, ‛என் எழுத்து வளத்திற்கு உங்கள் ஆதரவுதான் காரணம்' என்பதையும் மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடரட்டும்... தினமலர் நாளிதழின் சாதனைப் பயணம்!

பிரபு சங்கர்,
எழுத்தாளர், திருநெல்வேலி.

Advertisement