'தினமலர்' எனது தமிழ் ஆசிரியர்

என் தந்தை மறைந்த எஸ். முத்துசுவாமி அய்யர், தன் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும், எவற்றையெல்லாம் படிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். பத்திரிகை துறையிலும் ஆர்வம் உடையவர். அவ்வப்போது இரண்டு நாளிதழ்களில் வந்த செய்திகள், அவற்றை அணுகும் விதம் குறித்து பாடம் எடுப்பார். 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையர் அவர்களை, திருநெல்வேலியில் சந்தித்து, தன் இறுதி காலம் வரை, தொடர்பில் இருந்ததை நினைவு கூர்வார். தெய்வீகமும், தேச பக்தியும் இரண்டற கலந்தது 'தினமலர்' என்பதில், அவர் உறுதியாக இருந்தார்.
வாசிப்பின் அவசியத்தை, சிறு வயது முதல் என்னிடம் வளர்த்தவர் என் தந்தை. நான் 10 வயது வரை படித்தது 'கல்கண்டு' மற்றும் 'கண்ணன்' இதழ்களை மட்டுமே. எனது 10வது வயதில், விஜயதசமி அன்று, என் கையில் 'தினமலர்' நாளிதழை கொடுத்து, எழுத்துக்கூட்டி படிக்க வைத்தார். 'தினமலர்' எனக்கு தமிழாசிரியராக மாறியது அப்படித்தான்.
கல்லுாரி செல்லும் வரை, எனக்கு 'ன', 'ண' சந்தேகம் வந்தால், நான் தேடியது 'தினமலர்' நாளிதழை. நான் இன்று நாடறியும் தமிழ் பத்திரிகையாளனாக அறியப்படுவதற்கு, மிக முக்கிய காரணம், என் பால்ய வயது தமிழ் ஆசான் 'தினமலர்'.
என்னதான் ஆங்கில நாளிதழை படித்தாலும், தமிழில் ஒரு செய்தியை படிக்கும்போதே, அது முழுமை பெறுகிறது. அமெரிக்காவில் 25 ஆண்டுகள் தங்கி பணி செய்த போது, தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை, 'தினமலர்' இணையதளத்தில் அறிந்து கொள்வேன். நான் மட்டுமல்ல, லட்சக்கணக்கான அயலக தமிழர்கள் விரும்பும் செய்தி இணையதளம் 'தினமலர்'. மற்ற பத்திரிகைகள், இணையதள செய்திகளை துவங்குவதற்கு முன்பே 'தினமலர்' களத்தில் இறங்கி விட்டது. செய்தித்தாளை படிக்கும் அதே ஆர்வம், அதே பரபரப்பு இணைய இதழை படிக்கும் போதும் இருக்கிறது.
'தி இந்து', 'இந்தியா டுடே' போன்ற ஆங்கில இதழ்களில் பணியாற்றி, ஆனந்த விகடனில் நிர்வாக ஆசிரியராக பணியமர்த்தப்பட்ட போது, “எனக்கு தமிழ் இலக்கண பிழையின்றி எழுத வராது,” என்று நான் கூறினேன். அப்போது, ஆனந்த விகடன் ஆசிரியர், அமரர் பாலசுப்பிரமணியன், “தமிழில் பிரகாசிக்க வேண்டுமானால், இதை தினமும் ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும்,” எனக்கூறி 'தினமலர்' நாளிதழை கையில் கொடுத்து, கட்டளையிட்டார். என் தந்தையின் நினைவு வந்து மறைந்தது.
அதே ஆனந்த விகடன் நிறுவனத்தின், ஜூனியர் விகடனில், நிர்வாக ஆசிரியராக பல்லாயிரக்கணக்கான புலனாய்வு கட்டுரைகளை எழுதி பிரபலமடைய, எனக்கு மகா வீரம் கொடுத்தது 'தினமலர்'. அதே 'தினமலர்' நாளிதழில் என்னைப் பற்றிய செய்திகள் வரும்போது, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவேன். அவற்றை இன்னும் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறேன்.
'தினமலர்' இன்று தமிழ் நாளிதழ் மட்டுமல்லாது, சர்வதேச தமிழ் பத்திரிகை. ஹெச்-1பி விசா முதல் ஹமாஸ் பேச்சுவார்த்தை வரை சர்வதேச செய்திகளை, எளிய முறையில், சுலபமாக புரிந்துகொள்ளும்படி எழுதுகிறது. இப்படிப்பட்ட பொக்கிஷத்தை, நமக்கு வழங்கிச் சென்ற பிதாமகன் அமரர் ராமசுப்பையர் அவர்களின் பாதம் தொட்டு வணங்குவோம்.
'தினமலர்' நுாற்றாண்டு விழா காண, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பல தலைமுறைகளை கடந்து, அதன் தமிழ் சேவை தொடரும். பேசப்படும்.
அன்புடன்,
முனைவர், கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி
மூத்த சர்வதேச பத்திரிகையாளர்
மேலும்
-
குஜராத் அமைச்சரவை நாளை விரிவாக்கம்: அனைத்து அமைச்சர்களும் இன்று ராஜினாமா!
-
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
-
தெலுங்கானா முதல்வருக்கு எதிரான அவதுாறு: பெண் பத்திரிகையாளர்களை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
-
இந்திய நுகர்வோரின் நலனே முக்கியம்: டிரம்ப்புக்கு மத்திய வெளியுறவுத்துறை பதில்
-
சுதேசி சமூக வலைதளம் அரட்டை செயலியில் தினமலர் பக்கத்தை பாலோ செய்யுங்கள் வாசகர்களே!