தீபாவளியையொட்டி ஆடு விற்பனை ஜோர்

நாமக்கல்:தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச்சந்தையில், ஏராளமான ஆடுகள் விற்பனையாகின. அதன் மூலம், மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
நாமக்கல் மாநகராட்சிக்கு அருகில் வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு, வாரந்தோறும் சனிக்கிழமை, ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம்.
இந்த சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள், செம்மறி ஆடுகள் தரமாகவும், ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக, தீபாவளி, கறிநாள் மற்றும் விசேஷ நாட்களில், அதிக அளவில் இங்கு வர்த்தகம் நடக்கும்.
இந்நிலையில், நாளை (அக்., 20) தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல்லில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. அதில், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என, மொத்தம், 15,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
இதில், ஆடுகளின் எடைக்கு ஏற்றவாறு, ஆடு ஒன்று குறைந்தபட்சம், 5,000 முதல், அதிகபட்சமாக, 30,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஆட்டுக்குட்டி, 1,500 மதல், 2,000 ரூபாய் வரை விலைபோனது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, 'தீபாவளியையொட்டி, வழக்கத்தை காட்டிலும், அதிக அளவில் ஆடுகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
அதன் மூலம், மூன்று கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்தது. கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு விற்பனை அதிகரித்தது.
கடந்தாண்டு, 1.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது' என்றனர்.

Advertisement