நடுவானில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அசாமில் அவசர தரையிறக்கம்

1


புதுடில்லி: நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானம் அவசரமாக அசாமில் தரையிறக்கப்பட்டது.


அசாம் மாநிலம், குவஹாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதியம் 12.20 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புறப்பட்டு, மதியம் 1.25 மணிக்கு திப்ருகார் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், தரையிறங்குவதற்கு சற்று முன்பு, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்தார்.


இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் விமானம் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.
பின்னர் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே, குவஹாத்தியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு நிபுணர்கள் சரி செய்தனர்.

போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குவஹாத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.20 மணிக்கு திப்ருகரை அடைந்தது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பயணிகள் யாருக்கும் எந்த காயம் ஏற்படவில்லை என்பதை விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். பயணிகள் தங்களது வழக்கமான நேரத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். அண்மைக்காலமாக விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement