பள்ளி இடைநிற்றலை தடுக்க புதிய வாகனங்கள் அறிமுகம் பிற மலை கிராமங்களுக்கும் கூடுதல் வசதி செய்ய வலியுறுத்தல்
ஈரோடுஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் பள்ளி இடைநிற்றல், படிப்பதை தவிர்ப்பதை தடுக்க, வனத்துக்குள் உள்ள, நான்கு பள்ளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டதால், புதிதாக, 15 குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.
மலை மற்றும் வன கிராமங்களில் உள்ள குழந்தைகள், மலைப்பாதை, விலங்குகளின் அச்சம், பாதுகாப்பற்ற நிலை, காட்டாறு என பல காரணத்தால் பள்ளிக்கு வருவதில்லை; இடைநிற்றல் அதிகம். இந்த வகையில் ஈரோடு மாவட்டம் காளிதிம்பம் - திம்பம் வரை, 3 கி.மீ.,க்கு மிக அடர் வனத்துடன், வன விலங்குகள் சாதாரணமாக நடமாடும் பகுதியாக உள்ளது. பாதுகாப்பான பயணம், தொடர் வருகை, இடைநிற்றலை தடுக்க, ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி என ஆறு மாவட்டங்களுக்கு, 26 வாகனங்கள் அரசால், கடந்த, 6ம் தேதி வழங்கப்பட்டது.
இதில் நான்கு வாகனங்கள் ஈரோடு மாவட்டத்துக்கு தரப்பட்டு, சுடர் தொண்டு நிறுவனம் டீசல், டிரைவர், பராமரிப்பு பணிகளை கவனிக்கின்றனர். அதற்கு அரசு குறிப்பிட்ட நிதியை வழங்குகிறது.
இதுபற்றி சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜ் கூறியதாவது: இந்த, 4 வாகனங்கள் (நீளமான ஜீப்), பர்கூர், கொங்காடை, ஆசனுார், தலமலை ஆகிய நான்கு உறைவிட துவக்கப்பள்ளிக்காக வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். வாகனம் வழங்கப்பட்ட, 10 நாளில், காளிதிம்பம்-7, கொங்காடை-3, ஆசனுார்-5 என, 15 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர். கொங்காடை, காளிதம்பத்தில் இடைநின்ற இரு குழந்தைகள் மீண்டும் படிக்க வந்துள்ளனர். புதிய வாகன இயக்கத்தால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி; பெற்றோர்கள் நிம்மதி பெற்றுள்ளனர். இம்முயற்சியை பழங்குடியினர் நலத்துறை எடுத்துள்ளது. பள்ளி கல்வித்துறையும் சில முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
செங்குளம், கோவில்நத்தம், ஆலனை மலைப்பகுதி குழந்தைகள் ஒசூர் பள்ளிக்கு ஈச்சர், பிக்கப் வேன்களிலேயே தினமும் பயணிக்கின்றனர். விளாங்கோம்பையில் இருந்து, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிக்கப் வேனிலேயே வினோபா நகர் பள்ளிக்கு பயணிக்கின்றனர். பிக்கப் வேனில் வரும்போது மழை, வெயிலில் பாதிக்கின்றனர். யானைகள் தந்தத்தால் குத்துகின்றன. மாக்கம்பாளையம் - கடம்பூர் பள்ளிக்கு, 100 முதல், 120 குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். ஒரு பஸ் மட்டுமே செல்வதால், பிற பயணிகளுடன் சேர்ந்து ஏற முடியாமல் பள்ளியை தவிர்க்கின்றனர். இவற்றை ஆய்வு செய்து, பள்ளி குழந்தைகளுக்கான நேரத்தில் பஸ்களை, கூடுதல் வாகனங்களை இயக்க வேண்டும். பாதுகாப்பான பயணம் குழந்தைகளை பள்ளிக்கு தானாகவே அழைத்து வரும். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
'கருப்பு தீபாவளி' வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது
-
அஜய் ரஸ்தோகியை சந்திக்கிறது விஜய் தரப்பு; நடந்ததை விவரித்து ஆதாரங்களை அளிக்க முடிவு
-
அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு
-
நடிகர் விஜய் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட வேண்டும் கஸ்துாரி
-
இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு
-
வெளிநாடு செல்ல தி.மு.க.வினருக்கு தடை