பீஹார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை திரும்ப பெற்றது ஜேஎம்எம்; கூட்டணியை முறிக்க ஆலோசனை

ராஞ்சி: பீஹாரில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தொடர்ந்து காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சியுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யப்போவதாக ஜார்க்கண்டை ஆளும் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்துள்ளது. பீஹார் சட்டசபை தேர்தலில் இருந்து வேட்பாளர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், எதிர்க்கட்சியான மகாபந்தன் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த நிலையில், ஆர்ஜேடி கட்சி 143 தொகுதிகளுக்கு அதிரடியாக வேட்பாளர்களை அறிவிக்க எதிர்க்கட்சியினர் இடையே குழப்பம் நிலவுகிறது. இக்கட்சிகளுடன் ஜார்க்கண்டில் கூட்டணி வைத்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி பீஹாரிலும் தங்களுக்கு தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால் தொகுதிகள் ஒதுக்கப்படாத காரணத்தினால் ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.
இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகியுள்ள அக்கட்சி வேட்பாளர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு குறித்த பிரச்னையில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ள அக்கட்சி, ஜார்கண்டில் காங்கிரஸ், ஆர்ஜேடி உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதிவ்யா குமார் கூறியதாவது: தேர்தலில் போட்டியிட செய்யாமல் எங்களை தடுத்தது காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் செய்த சதியாகும். இதற்கு உரிய பதிலடியை கொடுப்போம். 2020 சட்டசபை தேர்தலிலும் 3 தொகுதிகளை ஒதுக்குவதாக அக்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், அதனை அக்கட்சிகளே எடுத்துக் கொண்டு ஏமாற்றின. ஆனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் அக்கட்சிகளுக்கு நாங்கள் போதுமான தொகுதிகளை ஒதுக்கினோம். இந்தாண்டும் மீண்டும் எங்களை அக்கட்சிகள் அவமான்பபடுத்தி உள்ளனர்.
கடந்த 7 ம் தேதி பாட்னாவில் நடந்த கூட்டத்தில் எனது கட்சி சார்பாக நான் பங்கேற்றேன். சுமூகமான சூழ்நிலையில் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பீஹார் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதை காங்கிரஸ் ஆர்ஜேடி தடுப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஆனால், கடந்த 7 முதல் இன்றைக்குள் அவர்கள் ஆமாம் இல்லை என எந்த தெளிவான பதிலையும் கூறவில்லை. அரசியல் தந்திரத்தில் ஆர்ஜேடி கட்சி ஈடுபட்டது. அரசியலில் இது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தி.மு.க., அறிவித்த மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைக்குமா?
-
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
-
வெடிகுண்டு தயாரித்தவர் கைது 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்
-
பள்ளி இடைநிற்றலை தடுக்க புதிய வாகனங்கள் அறிமுகம் பிற மலை கிராமங்களுக்கும் கூடுதல் வசதி செய்ய வலியுறுத்தல்
-
கடம்பூர், குன்றி, ஆசனுாரில் விடியவிடிய கனமழை திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு
-
பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரியில் 2வது நாளாக தடை