சிவப்பு நண்டுகளின் அதிசய பயணம்

அக்டோபர் மாதம். ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்மஸ் தீவில் சில சாலைகள் சிவப்பு நிறமாக மாறுகின்றன. காரணம் அந்த சாலைகளில் செல்லும் ஆயிரக்கணக்கான சிவப்பு நண்டுகள்
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் போது, கிறிஸ்மஸ் தீவின் மலைப் பகுதிகளில் வாழும் சுமார் 5 கோடி சிவப்பு நண்டுகள், தங்கள் அடர்ந்த காடுகளை விட்டு கடற்கரையை நோக்கி புறப்படுகின்றன
அவை காடுகளில் இருந்து சுமார் 8 முதல் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, கடற்கரையில் சிறிய குழிகள் தோண்டி முட்டை இடுகின்றன. பிறகு அந்த முட்டைகள் கடலின் அலையில் கலந்து, புதிய தலைமுறை நண்டுகளாக வெளிப்படுகின்றன.இது ஒரு பெரும் இனப்பெருக்கப் பயணம் ஆகும்.
பெரும் கூட்டமாக நகரும் நண்டுகள் சாலைகளைக் கடக்கும்போது, தீவின் மக்கள் மற்றும் அதிகாரிகள் அவற்றைக் காக்கும் வகையில் சாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.அந்த வழியாக நண்டுகள் கடந்து செல்லும் வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.சில இடங்களில் இவைகள் எளிதில் கடப்பதற்காக “நண்டு பாலங்கள்” உருவாக்கியுள்ளனர்.இதன் வழியாகவும் நண்டுகள் பாதுகாப்பாக சாலையை கடந்துசெல்லும்.இயற்கையின் அற்புதத்தை பாதுகாக்கும் மனிதனின் முயற்சி இதுவே!
கிறிஸ்மஸ் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய ஆஸ்திரேலிய தீவு.
இந்த தீவில் காணப்படும் சிவப்பு நண்டுகள் உலகில் எங்கும் காணப்படாத தனிப்பட்ட இனமாகும்.
அவை தீவின் உயிர் வளத்தின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகவும் திகழ்கின்றன.
இந்த நண்டுகள் வெறும் அழகான உயிரினங்கள் மட்டுமல்ல.அவை தீவின் காடுகளில் விழும் இலைகள் மற்றும் சிறு உயிரிகளை உண்டு மண் ஊட்டச்சத்தையும் பசுமையையும் பேணும் முக்கிய பங்கையும் வகிக்கின்றன.இதன் காரணமாக இதனை பசுமைச் சமநிலையின் காவலர்கள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்,சிவப்பு நண்டுகள் இல்லையெனில் கிறிஸ்மஸ் தீவின் காடுகள் மாறுபடும் என்பதையும் உறுதியாக நம்புகின்றனர்.
நண்டுகள் கடற்கரை அடையும் நேரம் தீவில் ஒரு திருவிழாவாகவே மாறுகிறது.பயணிகள் அந்த காட்சியைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து வருகிறார்கள்.
சாலைகளில் நண்டுகள் நடந்து செல்லும் காட்சி —நிறம், ஒழுங்கு, இயற்கை, உயிர் — எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்கும் ஒரு உயிர் ஓவியம் போல தெரிகிறது.
இந்த ஆண்டு இப்போது நடைபெற்றுவரும் இந்த மாபெரும் இயற்கை நிகழ்வின் புகைப்படங்கள், “பூமியின் அதிசயங்களுள் ஒன்று” எனப் பலர் வர்ணிக்கிறார்கள். சிவப்பு நண்டுகள் சாலைகளைக் கடக்கும் காட்சி உலகம் முழுவதும் இயற்கை நேசிகளின் மனதை கவர்ந்துள்ளது. அந்தப் படத்தில், நண்டுகள் சிறிய படைகளாக சாலைகளில் நகர்கின்றன; அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் இயற்கையின் அதிசய ஒழுங்கு புலப்படுகிறது.
இந்த சிவப்பு நண்டுகள் யாரையும் கடிப்பதில்லை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினம் கிடையாது எதையும் ருசித்து பார்க்கும் ஆர்வம் உள்ள மக்கள் இந்த சிவப்பு நண்டை ருசி பார்க்கக்கூடாது என்பதற்காக இதை தீவின் அடையாளமாகவும் பெருமையாகவும் அறிவித்து பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாகவும் அதனை அரசாங்கம் பாதுகாத்து வருவதுடன் மக்களுக்கும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
சிறிய உயிரினங்களும், இயற்கைச் சுழற்சியை எவ்வளவு நுணுக்கமாகப் பேணுகின்றன என்பதை நண்டுகளின் இந்தப் பயணம் நமக்கு உணர்த்துகிறது
-எல்.முருகராஜ்
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
கத்திமுனையில் மாணவர்களை தாக்கி பணம் பறித்தோருக்கு வலை
-
நாகன் தாங்கல் ஏரியை துார் வாரி சீரமைத்த டாடா கம்யூனிகேஷன்ஸ்
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுத்தமான சுற்றுலா தலம் விருது
-
வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை நிதித்துறை ஒப்புதல்
-
மருத்துவ சான்றிதழ் படிப்பு நவ., 14 வரை அவகாசம்