மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

தொண்டாமுத்தூர்: கோவையில், அதிகாலையில், விளைநிலத்தில் உணவு தேடி வந்த யானை, மின்கம்பத்தை இழுத்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி, குப்பேபாளையத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து, நேற்று அதிகாலை, 30 வயதுடைய ஆண் யானை ஒன்று, விளைநிலங்களுக்குள் உணவு தேடி வந்தது.

தென்னந்தோப்புக்குள் புகுந்து, அங்கிருந்து, அதிகாலை, 5:00 மணிக்கு, ராமன் குட்டை அருகில் நாகராஜ் என்பவரது தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து, தக்காளியை உண்டு அங்கிருந்து, வெளியேறியது. பின் அங்கு விவசாய வழிதடத்தில், மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, 24 அடி உயர மின்கம்பத்தை, தும்பிக்கையால் பிடித்து இழுத்துள்ளது. அதில், மின்கம்பம் உடைந்து விழுந்தது. எதிர்பாராத விதமாக, மின்கம்பியில் இருந்து, யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில், யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

யானையில் பிளிறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்த தோட்டத்தினர் ஓடி வந்து பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், வனத்துறையினர் வந்து, கிரேன் உதவியுடன் யானையின் உடலை லாரியில் ஏற்றி, சிறுவாணி வனப்பகுதிக்கு கொண்டு சென்று, வனக்கால்நடை டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்த பின், உடலை, வனப்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்தனர்.

3 யானைகள் உயிரிழப்பு  போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், இந்தாண்டு, ஜூலை, 31ல், சப்பாணிமடையில், விவசாய நிலத்தில் இருந்த பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் விழுந்து, 35 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது.

 கடந்த, அக்., 10ல், பூண்டி வனப்பகுதியில், இயற்கையாக உயிரிழந்த நிலையில், 24 வயதுடைய ஆண் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

 இதற்குமுன், 2021ல், செம்மேட்டில், மின்வேலியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து 22 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது.

Advertisement