குடும்ப அரசியல் செய்யும் இரண்டு கட்சிகள்; தேஜஸ்வி, ராகுலை மேற்கோள் காட்டி விளாசிய அமித்ஷா

16

பாட்னா: லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல்வர் ஆக்கவும், சோனியா தனது மகன் ராகுலை பிரதமர் ஆக்கவும் விரும்புகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.




பீஹார் மாநிலத்தில் ககாரியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: பீஹார் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் காட்டாட்சி மீண்டும் வரும். மக்கள் அனைவரும் தேஜ கூட்டணிக்கு ஓட்டு அளிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே பீஹார் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிறார். பீஹாரை நக்சலைட்டிலிருந்து விடுவிக்க தேஜ கூட்டணி அரசு பாடுபட்டுள்ளது.


உங்கள் ஓட்டுக்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பீஹார் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்வோம். இரண்டு கட்சிகள் குடும்ப அரசியல் செய்கிறது. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவை பீஹாரின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தனது மகன் ராகுலை அடுத்த பிரதமராக்க வேண்டும் என்று விரும்புகிறார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.


2016ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ல் வான்வழித் தாக்குதல் மற்றும் 2025ல் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா மூன்று முறை தகுந்த பதிலடி கொடுத்து உள்ளது. பிரதமர் மோடி தனது ஆட்சியின் கீழ் நாட்டைப் பாதுகாப்பானதாக மாற்றினார். ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க ராகுல் விரும்புகிறார். ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா இல்லையா? தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பீஹாரில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அகற்றுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement