இரட்டை இன்ஜின் அரசின் வெற்று வாக்குறுதிகள்: ராகுல் குற்றச்சாட்டு

28

புதுடில்லி: பீஹாருக்கு அறிவிக்கப்பட்ட 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், மாநிலத்தில் இரட்டை இன்ஜின் அரசு அளித்தது அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் எனத் தெரிவித்துள்ளார்.


பீஹாரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்., 1 முதல் நவ.,30 வரை 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்து இருந்தது. தினமும் சராசரியாக 196 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவித்து இருந்தது. இதில் குறைந்தபட்சமாக அக்., 8 ல் 166 ரயில்களும், அதிகபட்சமாக அக்.,18 ல் 280 ரயில்களும் இயக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளதாவது:
இது தீபாவளி, சாத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் மாதம்.
பீஹாரில் இந்த பண்டிகை என்பது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல. வீடு திரும்புவதற்கான ஏக்கத்தையும், மண்ணின் வாசனையையும், குடும்பத்தின் மீதான அன்பையும், கிராமத்தின் வாழ்க்கையின் மீதான அரவணைப்பையும் குறிக்கிறது.ஆனால் இந்த ஏக்கம் இப்போது ஒரு போராட்டமாக மாறிவிட்டது.


பீஹாருக்கான ரயில்கள் போதுமான அளவு நிரம்பியுள்ளன. டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. பயணம் மனிதாபிமானம் அற்றதாகிவிட்டது. பல ரயில்களில் அளவுக்கு அதிகமாக 200% வரை மக்கள் பயணிக்கின்றனர். மக்கள் கதவுகளிலும், கூரைகளிலும் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர். இரட்டை இன்ஜின் அரசின் அளித்தது அனைத்தும் வெற்று வாக்குறுதி என்பதை நிரூபிக்கின்றன.

12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் எங்கே?ஒவ்வொரு ஆண்டும் சூழ்நிலை மோசமாவது ஏன்?ஒவ்வொரு ஆண்டும் பீஹார் மக்கள் ஏன் இத்தகைய அவமானகரமான சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு மாநிலத்தில் வேலைவாய்ப்பும், மரியாதையான வாழ்க்கையும் இருந்திருந்தால், அவர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியதில்லை.



இவர்கள் உதவியற்ற பயணிகள் மட்டுமல்ல, தேஜ கூட்டணியின் வஞ்சகக் கொள்கைகள், நோக்கங்களுக்கு வாழும் சான்றாகும். பாதுகாப்பான, மரியாதைக்குரிய பயணம் என்பது சலுகை அல்ல. அது ஒரு உரிமை இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement