நெருப்போடு விளையாடுகிறார்கள்; பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்

12


காபூல்: 'சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடன் விளையாடுகிறார்கள்' என்று பாகிஸ்தானுக்கு ஆப்கன் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட எல்லையில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன.

கடந்த 9ம் தேதி காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று தலிபான்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதையடுத்து, இருநாடுகளிடையேயான சண்டையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை துருக்கி, கத்தார் தலைமையில் நடைபெற்றது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே நவ., 6ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தப்பட இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. அதுவரையில் போர் நிறுத்தம் செய்ய இருதரப்பு ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜூதின் ஹக்கானி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது; நாம் அனைவரும் முஸ்லிம்கள், சகோதரர்கள். ஆனால், சிலர் (பாகிஸ்தான்) தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடனும், போருடனும் விளையாடுகிறார்கள். நாங்கள் போரை விரும்பவில்லை. அதே வேளையில் எங்கள் பிராந்தியத்தை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்போம், எனக் கூறினார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் காபூல் நதியில் உடனடியாக அணை கட்டும் திட்டத்தை தொடங்க ஆப்கன் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement