இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்

20


வாஷிங்டன்: மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.

தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் என்பவர் நியூயார்க் மேயராக இருந்தார். அவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இன்று (நவம்பர் 4) மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் களத்தில் உள்ளனர். அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. கடந்த அக்.,25ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.



ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த தேர்தலில் இவர் வெற்றிப்பெறுவரா? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றிருக்கிறது. ஏனெனில் நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும்.


இந்த தேர்தல் தொடர்பாக அதிபர் டிரம்ப் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் பொருளாதார, சமூக பேரழிவை சந்திக்கும். நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால், குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் வழங்கமாட்டேன்.


ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் அது மோசமாகிவிடும். அவர் திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக, மம்தானியை கொண்டுவர முடியாது. நாம் இதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement