படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்

1

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தபணி திட்டமிட்டபடி நேற்று துவங்கியது. அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டாத நிலையில், தி.மு.க., பூத் ஏஜன்டுகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, 2004ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பது, இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் போன்றோரை நீக்குவது, இதன் பிரதான நோக்கம்.

இதனால், சில அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இப்பணியை ஒத்திவைக்க வலியுறுத்தி, தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.எனினும், திட்டமிட்டபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நேற்று துவங்கியது.

முதல் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

கடந்த 2002 - 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் வீடுகளுக்கு சென்று, கணக்கெடுப்பு படிவத்தை வினியோகம் செய்தனர். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, அடுத்தமுறை வரும்போது உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூறி சென்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு, தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சி தலைமை உத்தரவுபடி, பூத் ஏஜன்டுகள், தேர்தல் அலுவலர்களுடன் சென்றனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒரு பூத் ஏஜன்டு, இரண்டு துணை ஏஜன்டுகள், 100 வாக்காளர்களுக்கு ஒரு ஏஜன்ட் என, தேர்தல் பணிக்கு, கட்சி தொண்டர்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது.

அதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலருடன், தி.மு.க., தரப்பில் மட்டும், 10க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். கூட்டணி கட்சி பூத் ஏஜன்டுகளும் சென்றனர். ஆனால், அ.தி.மு.க, தரப்பில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

Advertisement