நடக்கக்கூடாத கொடூரம்: கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

6


கோவை: கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், '' எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம்'' எனக்கூறியுள்ளார்.


கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் மதுரையை சேர்ந்த 20 வயது மாணவி, விமான நிலையத்தின் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர், ஆண் நண்பரை தாக்கி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர்.

ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் அரிவாளால் தாக்க முயன்றனர். இதனையடுத்து அவர்களின் காலில் சுட்டு பிடித்தனர். மாணவி பலாத்கார சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: உண்மையில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம். அதுவும் நம்முடைய கொங்கு மண்ணில் நடந்துள்ளது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதும் காவல்துறையின் பொறுப்பு.

நிச்சயம், காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என நம்புகிறேன். அந்த சகோதரிக்கும், அவருடைய பெற்றோருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement