வடகிழக்கு மாநிலங்களில் ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள்

3


வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய திருப்பமாக, பிராந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே அமைப்பாக ஒன்று சேர்ந்துள்ளன. வடகிழக்கு மாநில மக்களின் குரலுக்காகவும், பிரதிநிதித்துவத்திற்காகவும் இம்முடிவை எடுத்துள்ளன.


வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை ஏழு சகோதரி மாநிலங்களாக அழைக்கப்படுகின்றன. சிக்கிம் மாநிலம் மட்டும் சகோதர மாநிலமாக குறிக்கப்படுகிறது.



வடகிழக்கு மாநில மக்களின் பிரச்னைகளை ஒரே குரலாய் எழுப்பும் வகையில், பிராந்திய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கைகோர்த்து, புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.


இதற்காக தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா, திரிபுராவைச் சேர்ந்த டிப்ரா மோத்தா கட்சி தலைவர் பிரத்யோத் மானிக்யா, அசாமின் மக்கள் கட்சித் தலைவர் டேனியல் லாங்தசா மற்றும் நாகாலாந்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஹான்லுமோ கிகோன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர்.


டில்லியில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கான்ராட் சங்மா, “ஒருங்கிணைந்த அரசியல் கட்சிக்கான செயல் திட்டம், வடிவம், கொள்கை ஆகியவை அடுத்த 45 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும். இதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.


அதேசமயம் முக்கிய பிராந்திய கட்சிகளான மிசோரமின் ஆளும் சோரம் மக்கள் இயக்கம், நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக முன்னணி மற்றும் அசாமின் அசோம் கன பரிஷத் ஆகிய கட்சிகள் இந்த ஒருங்கிணைப்புக்கு சம்மதிக்கவில்லை. இந்த கட்சிகள் அனைத்தும் பா.ஜ.,வின் கூட்டணியில் உள்ளன.



-- நமது சிறப்பு நிருபர் -

Advertisement