35வது நாளாக அரசு நிர்வாகம் முடக்கம்: 'சாதனை படைக்கிறார்' அமெரிக்க அதிபர் டிரம்ப்

6


வாஷிங்டன் : அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை 35வது நாளை எட்டிய நிலையில் ஊதியம் கிடைக்காததால், ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். இதனால், ஆள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவில் முக்கிய துறைகளின் சேவை ஸ்தம்பித்துள்ளது.


கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், துவக்கத்தில் இருந்தே பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார். உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு, குடியேற்றச் சட்டத்தில் கடுமை, 'எச்1பி' விசாவில் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கு தேவையான நிதியை விடுவிப்பதில் பார்லிமென்டின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், நிதி விடுவிப்பு தடைபட்டுள்ளது. இதையடுத்து, அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இதனால், ஊழியர்கள் பலர் விடுப்பில் சென்றதால், அத்தியாவசிய சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. கடந்த அக்., 1 முதல், நிதி முடக்கம் துவங்கியது. தொடர்ந்து, 35வது நாளாக அரசு துறைகளுக்கு செலவழிக்க பணம் வழங்கப்படவில்லை. கடந்த 2018 - 2019ல் டிரம்பின் முந்தைய ஆட்சியிலும் இதுபோல் நிதி முடக்கம் ஏற்பட்டது.


அப்போது, 35 நாட்களுக்கு அது நீடித்தது. தற்போதைய நிலையில் தீர்வுக்கு உடனடி வாய்ப்பு இல்லாததால், தன் சொந்த சாதனையை டிரம்ப் முறியடிக்க உள்ளார். அரசின் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவையையும் அது முடக்கியுள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் மட்டும் 16,700 விமானங்கள் தாமதமானதாகவும், 2,282 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்காவில் நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாகவும், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement