ரஞ்சி கோப்பை: தமிழகம் 'டிரா'
கோவை: விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியை தமிழக அணி போராடி 'டிரா' செய்தது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், 'நடப்பு சாம்பியன்' விதர்பா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 291, விதர்பா 501 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 6/0 ரன் எடுத்து, 204 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. விமல் (12), பிரதோஷ் (14), சித்தார்த் (11) கைவிட, தமிழக அணி 47/3 என தவித்தது. ஆதிஷ் 46, ஷாருக்கான் 40, முகமது 25 ரன் எடுத்தனர். 7வது விக்கெட்டுக்கு இணைந்த பாபா இந்திரஜித், கேப்டன் சாய் கிஷோர் ஜோடி, விக்கெட் சரிவை தடுக்க போராடியது.
20.3 ஓவரில் 26 ரன் மட்டும் எடுத்து, அணியை காப்பாற்றியது. தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 233/6 ரன் மட்டும் எடுக்க, போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் விதர்பா 3, தமிழகம் 1 புள்ளி பெற்றன.
ஜெய்ஸ்வால் அபாரம்
ஜெய்ப்பூரில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் முதல் இன்னிங்சில் மும்பை 254, ராஜஸ்தான் 617/6 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நேற்று துவக்க வீரர் ஜெய்ஸ்வால், 156 ரன் எடுத்தார். மும்பை அணி 269/3 ரன் எடுக்க, போட்டி 'டிரா' ஆனது.
பாட்னாவில் நடந்த 'பிளேட் குரூப்' போட்டியில் முதல் இன்னிங்ஸ் மேகாலயா 408/7 ரன் எடுத்தது. நேற்று கடைசி நாளில் பீஹார் அணி 156/6 ரன் எடுக்க போட்டி 'டிரா' ஆனது. வைபவ் 67 பந்தில் 93 ரன் எடுத்து உதவினார்.