அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி

22


வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த தேர்தலில், பல்வேறு மாநிலங்களில் டிரம்ப் கட்சி (குடியரசு கட்சி) படுதோல்வி அடைந்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்ற பிறகு, இந்தாண்டு முதல் முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநில கவர்னர், அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் டிரம்ப்பின் குடியரசு கட்சி தோல்வியை தழுவியுள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

* விர்ஜினியா மாநில கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஸ்பான்பெர்கர், டிரம்ப் கட்சியின் (குடியரசு கட்சி) வேட்பாளரை தோற்கடித்தார். விர்ஜினியா மாநிலத்தில் அட்டர்னி ஜெனரல் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கசாலா ஹாஸ்மி வெற்றி பெற்றுள்ளார்.



* நியூஜெர்சி மாநில கவர்னர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த மிக்கி செரில், டிரம்ப் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார். நியூயார்க் மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் மம்தானி, டிரம்ப் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்தார்.


* மாசாசுசெட்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த மிசேல் வூ வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

இதேபோல, கலிபோர்னியா மாநிலத்தில் மாவட்ட தொகுதி மறு வரையறை தொடர்பான ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் மக்கள் ஓட்டளித்துள்ளனர். இதன் மூலம் கலிபோர்னியா மாநிலத்தில் ஜனநாயக கட்சியின் நிலை வலுவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதான் காரணம்?




டிரம்ப் அதிபராக 2வது முறை வெற்றி பெற்று பதவிக்கு வந்த பிறகு, பல்வேறு தடாலடி முடிவுகளை அறிவித்து வருகிறார். முக்கியத்துவம் இல்லாத அரசு துறைகளை குறைப்பது, அரசு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது, வெளிநாடுகளுக்கு வரி விதிப்பது என அவரது முடிவுகளால் தினமும் அமெரிக்க அரசியல் பரபரப்பாகவே இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல், டிரம்ப் ஆட்சியின் மீதான கருத்துக் கணிப்பாகவே கருதப்படுகிறது. தேர்தல் தோல்வி பற்றி கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், 'வேட்பாளர் பட்டியலில், எனது பெயர் இல்லாததும், அரசு நிர்வாகம் முடக்கப்பட்டது காரணம்'' என்று தெரிவித்துள்ளார்.


வெற்றி பெற்றவர்களுக்கு, ஜனநாயக கட்சியை சேர்ந்த, முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement