ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ராகுல்

38

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தல் நாளை( நவ.,06) நடக்கும் நிலையில் வாக்காளர்கள் அதிகளவு ஓட்டுப்போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் எனக்கூறியுள்ளார்.


இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட 'எக்ஸ்' சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: நாளை ஓட்டுப்போடுவதற்கான சாதாரண நாள் மட்டும் அல்ல. பீஹாரின் எதிர்காலத்தின் திசை கண்டறிவதற்கான நாள். உங்களில் பலர் முதல்முறையாக நாளை ஓட்டுப் போட போகிறீர்கள். இது உங்களின் உரிமை மட்டும் அல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய கடமை.


ஹரியானாவில் ஓட்டுத் திருட்டு என்ற ஒரு மோசமான விளையாட்டு எப்படி விளையாடப்பட்டது என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் என அனைத்து இடங்களிலும் மக்களின் குரல்கள் ஒடுக்க முயற்சி செய்யப்படுகிறது. தற்போது பீஹார் மீதும், உங்களின் ஓட்டு மற்றும் எதிர்காலம் மீது கண் வைத்துள்ளனர்.


நாளை ஓட்டுச்சாவடிகளுக்கு அதிகளவு சென்று மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். ஓட்டுச்சாவடியில் நடக்கும் ஒவ்வொரு சதி, ஒவ்வொரு சூழ்ச்சிக்கும் எதிராக விழிப்புடன் இருங்கள். பொது மக்களிடம் உள்ள விழிப்புணர்வே, ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் ஆகும். பீஹாரின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. ஓட்டுத்திருட்டு, அரசு திருட்டு என்ற சதியை தோற்கடியுங்கள். உண்மை மற்றும் அஹிம்சை வழியில் நடந்து உங்கள் ஓட்டு மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்தப் பதிவில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement