உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய மாநில தகவல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்களை வழங்கும்படி, மனுதாரர் அளித்த மனு மீது, 12 வாரங்களில் முடிவெடுக்க, மாநில தகவல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில தகவல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின், சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் ஆதித்ய சோழன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் பதவியில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விபரங்கள் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம், மனுதாரரின் மேல்முறையீடு மனு மீது, 12 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என, மாநில தகவல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.மாலா உத்தரவிட்டார். அதன்படி அக்., 10ம் தேதிக்குள் விசாரணை நடத்தி, தன் முடிவை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தகவல் ஆணையம் அவ்வாறு செய்யாமல், தாமதமாக மனுதாரருக்கு சம்மன் அனுப்பியது.

விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, புகார்தாரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். மாநில தலைமை தகவல் ஆணையர் அவசர வேலையாக டில்லி சென்றுள்ளதால், விசாரணையை தள்ளி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement