மதுராந்தகம் -- உத்திரமேரூர் சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மதுராந்தகத்திலிருந்து நெல்வாய் வழியாக உத்திரமேரூர் வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையை புழுதிவாக்கம், வேடந்தாங்கல், நெல்வாய், சூரை, புதுப்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை, இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என வாகன பயன்பாடு நிறைந்த சாலையாகும்.

அதில், கக்கிலப்பேட்டை முதல் தனியார் மாத்திரை தொழிற்சாலை வரை, 2 கி.மீ., துாரம் சாலைகள் பயன்படுத்த முடியாதவாறு இருபதுக்கு மேற்பட்ட இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை குண் டும், குழியுமாக உள்ளது.

இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுகின்றன.

எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, புதிதாக சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement