கிரைம் கார்னர்

வீட்டில் துாங்கியவரை கடத்தியோர் சிக்கினர்

கொளத்துார்: கொளத்துார், தில்லை நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 24; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 3ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அவரை முன்விரோதம் காரணமாக கடத்தி சென்று தாக்கி மொபைல் போனை எடுத்து சென்ற, கொளத்துாரைச் சேர்ந்த வேல், 23, மாணிக்கம், 29 மற்றும் அருண்குமார், 21, ஆகியோரை, ராஜமங்கலம் பேலீசார் நேற்று கைது செய்தனர்.

ஸ்கூட்டரில் கஞ்சா கடத்தியோர் கைது

ராயபுரம்: ராயபுரம், மன்னார் சாமி கோவில் தெருவில், போக்குவரத்து போலீசார் நேற்று முன் தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 'டி.வி.எஸ்., ஜுப்பிட்டர்' ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய பழவேற்காடைச் சேர்ந்த யாகூப், 38, எனவும், எடப்பாளையத்தைச் சேர்ந்த மாதவன், 32, என்பவரிடமிருந்து, கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தம்பதியை தாக்கிய நபருக்கு 'காப்பு'

வானகரம்: வானகரம், கணபதி நகரைச் சேர்ந்த தம்பதி பன்னீர்செல்வம், 60, ஜோதிலட்சுமி, 45. நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் வீட்டினருகே நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாகவும், பன்னீர்செல்வத்தின் மீது மோதுவது போன்றும் வந்துள்ளார். இது குறித்து தட்டிக்கேட்டபோது, பன்னீர் செல்வத்தையும் அவரது மனைவியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். விசாரித்த போலீசார், தம்பதியை தாக்கிய, ஆலப்பாக்கம், கணபதி நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 43, என்பவரை கைது செய்தனர்.

உடல்நல பாதிப்பால் மூதாட்டி தீக்குளிப்பு

பாடி: பாடி, மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அமுதா, 75. வயது முதிர்வின் காரணமாக, உடல்நல பாதிப்பால் அடிக்கடி அவதியடைந்து வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்தவர், நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கையர் கைது

பெரம்பூர்: கொல்கட்டா செல்ல பெரம்பூர் ரயில் நிலையத்தில், கடந்த 29ம் தேதி காத்திருந்த, அர்மான்அலி, 28, சபாஜ், 18, ஆகியோரை தாக்கி, 6,000 ரூபாய் பறித்த திருநங்கையரான அம்பத்துாரைச் சேர்ந்த பாவனா என்கிற பாண்டியன், 20, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பவித்ரா என்கிற சர்வேஷ்குமார், 18, ஆகியோரை, செம்பியம் போலீசார் கைது செய்து, 6,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பெண் துாய்மை பணியாளர்கள் கைது

ஓட்டேரி: புளியந்தோப்பைச் சேர்ந்தவர் கலைவாணி, 41; துாய்மை பணியாளர். இவர், திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனக்கூறி தாக்கிய, புளியந்தோப்பைச் சேர்ந்த பூவரசி, 42, கொசப்பேட்டையைச் சேர்ந்த சாமந்தி, 42, ஆகியோரை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு 'கம்பி'

அயனாவரம்: வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 48; சமையல் கலைஞர். நேற்று முன்தினம் காலை அயனாவரத்தில் உள்ள டீக்கடைக்கு சென்றபோது, மர்மநபர் அவரை தாக்கி, கத்திமுனையில் 350 ரூபாயை பறித்துச் சென்றார். அயனாவரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட ஆகாஷ், 24, என்பவரை நேற்று கைது செய்தனர்.

 அதேபோல, கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ராஜேஷ், 21, என்பவரிடம் வீட்டின் அருகே, நான்கு பேர் கும்பல், கத்தியால் தாக்கி மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாய் பறிக்க முயன்றனர். விசாரித்த போலீசார், கொடுங்கையூரைச் சேர்ந்த அபினேஷ், 20, மனோஜ், 19, ஜெயசந்திரன், 20 ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக், 20, என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement