மனசுக்குள்ளே கூகுள் மேப்
திருக்கை மீன்களிலேயே மிகப்பெரியது யானை திருக்கை. இதன் அகலம், 13 -- 15 அடி. சிறகு போன்ற பெரிய துடுப்புகள் கொண்டு இவை நீந்தும். இவற்றால் மிக ஆழமான கடல் பகுதிகளுக்கு கூட செல்ல முடியும்.
அருகி வரும் உயிரினங்களான இவை குறித்து சமீபத்தில் பெரு, இந்தோனேஷியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு முக்கிய ஆய்வை மேற்கொண்டனர். 24 யானை திருக்கை மீன்களை பிடித்து, அவற்றில் சென்சார்களை பொருத்தி, அவற்றின் நகர்வை செயற்கைக்கோள் வாயிலாக தொடர்ந்து கண்காணித்தனர்.
அப்போது, அவை நேராக கடலில் பயணம் செய்யாமல் அவ்வப்போது கடலின் மேற்பரப்பில் இருந்து ஆழ் கடலுக்குள் 1,200 மீட்டர் ஆழம் வரை சென்று வந்தது தெரிந்தது. அவை தங்களை வேட்டையாடும் விலங்கு களிடமிருந்து தப்பிக்கவோ அல்லது இரையைப் பிடிக்கவோ இவ்வாறு ஆழ்கடல் செல்லவில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பின், ஏன் காரணமே இல்லாமல் போக வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
யானை திருக்கை மீன்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் நியூசிலாந்தின் வட பகுதி கடல்களில் இரை தேடி, உண்டு அங்கேயே வாழும். ஆனால், கோடைக்காலம் முடியும் சமயத்தில் இந்தப் பகுதிகளில் கடல் நீர் குளிர்ந்து விடும் என்பதால், கடல் நீர் வெப்பமாக இருக்கும் வட பகுதிகளுக்கு வலசை செல்லும்.
இவ்வாறு செல்லும் போது வழிதவறி விடக்கூடாது; மிக ஆழமாக சென்று சிக்கி விடக்கூடாது என்பதற்காக, வலசை செல்வதற்கு முன்பே தான் செல்லும் பாதையில் உள்ள காந்தப் புலம், ஆக்சிஜன் அளவு, வெளிச்சம், தட்பவெப்பம் ஆகியவற்றை சோதித்து அறிகிறது. எந்தப் பாதையில் சென்றால் பாதுகாப்பு என்பதை அறிந்தபின் பயணத்தை தொடர்கிறது.
இதற்காகத் தான் அவ்வப்போது ஆழ்கடல் சென்று வருகிறது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சொல்லப்போனால் நாம் 'கூகுள் மேப்' பயன்படுத்துவது போல், இவையும் தங்கள் மனதில் பயணப் பாதையை முன்னரே பதிந்து வைத்துக் கொள்கின்றன எனலாம்.
மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!