பொதுக்கூட்டம் நடத்த வைப்புத்தொகை; 3 மணி நேரம் அனுமதி: தமிழக அரசு

4


சென்னை: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்துவதற்கு வைப்புத்தொகை வசூலிப்பது,3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்குவது என முடிவு செய்துள்ளதாக, சென்னையில் இன்று( நவ.,06) நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கடந்த செப்டம்பர் 27 ம் தேதி கரூரில் நடந்த அரசியல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடந்தது.


இதில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைசெல்வன், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தலைமைச்செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

அரசு உருவாக்கியுள்ள நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

* அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும்.

* கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத்தொகை வசூலிக்க திட்டம்

* பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொது மக்கள் காத்திருக்க அனுமதி

* பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வைப்புத்தொகையாக



* 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.1 லட்சம் வரையிலும்

*10 ஆயிரம் பேர் முதல் 20 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.3 லட்சம் வரையிலும்

*20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.8 லட்சம் வரையிலும்

* 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.20 லட்சம் வரையிலும் வைப்புத்தொகை வசூலிக்கப்படும்.


தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அனைவரும் சமம்

இந்த கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக கடமை. அனைவரும் சமம் என்ற முறையில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement