மிளகாய்பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண்ணை 20 விநாடிகளில் 17 முறை அறைந்த உரிமையாளர்

1

ஆமதாபாத்: குஜராத்தில் மிளகாய் பொடியை தூவி நகையை கொள்ளையடிக்க முயன்ற பெண்ணை கடை உரிமையாளர் 17 அறைகள் விட்டு, அங்கிருந்து விரட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஆமதாபாத்தில் உள்ள ரணிப் பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு முகத்தை துப்பட்டாவால் மூடியபடியே பெண் ஒருவர் வாடிக்கையாளர் போல் வந்துள்ளார்.

வாடிக்கையாளர் தான் என்று எண்ணியபடி கடையின் உரிமையாளர் அவருக்கான நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை கவனித்துள்ளார். அடுத்த விநாடி, தமது கையில் வைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை உரிமையாளர் முகத்தில் வீசியுள்ளார் அந்த பெண்.

மிளகாய் பொடியை வீசி, கையில் கிடைத்தவற்றை அள்ளிக் கொண்டு எஸ்கேப் ஆவது தான் அந்த பெண்ணின் திட்டமாக இருந்திருக்கிறது. விநாடிக்கும் குறைவான நேரத்தில் இதை உணர்ந்து கொண்ட உரிமையாளர், மிளகாய் பொடி வீசிய மறுகணமே, அந்த பெண் சரமாரியாக அடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

முதல் இரண்டு, மூன்று அறைகள் வாங்கிய பெண், பலம் கொண்டு உரிமையாளரை அடிக்க முயன்றிருக்கிறார். மிளகாய் பொடி பட்டதால் உச்சப்பட்ச எரிச்சலில் இருந்த உரிமையாளரோ, 17 முறை அந்த பெண்ணை விடாமல் அறைந்து தள்ளியிருக்கிறார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 விநாடிகளே.

அறையை தாங்க முடியாமல் அந்த பெண் ஒரு கணம் நிலைகுலைய, அவரை கடையில் இருந்து இழுத்துக் கொண்டு வீதிக்கு சென்று இருக்கிறார் உரிமையாளர். இந்த மிளகாய் பொடி வீச்சு, அறை உள்ளிட்ட சம்பவங்கள் அப்படியே கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். ஆனால், அதற்குள் உஷாரான பெண்ணோ. அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்து இருக்கிறார். கடையின் சிசிடிவி கேமிரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு, போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

Advertisement