ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்


புதுடில்லி: உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை அப்பணியில் இருந்து விடுவிக்கவும், இந்த நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும் என ரஷ்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ரஷ்ய ராணுவத்தில் தற்போது 44 பேர் பணியாற்றி வருகின்றனர்.


அவர்களின் நிலைப்பற்றி சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவர்களை மீட்பதற்காக ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது.

ரஷ்ய அதிபர் புடினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்படி பலர் மீட்கப்பட்டனர். வெளிநாட்டில் வேலை எனக்கூறுவோரிடம் கவனமாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

Advertisement