இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: மாநில அரசு சார்பில் பாராட்டு

மும்பை: சொந்த ஊர் திரும்பிய உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடந்தது. நவி மும்பையில் நடந்த பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய அணியினருக்கு உலக கோப்பையுடன், ரூ. 39.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரூ. 51 கோடி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டில்லி சென்ற இந்திய வீராங்கனைகள், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


இந்நிலையில் இந்திய வீராங்கனைகள், தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களுக்கு, உள்ளூர் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது மாநில அரசு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மும்பை சென்ற ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ் ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் ரூ. 2.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கடப்பாவை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரீ சரனிக்கு, ஆந்திர மாநில அரசு சார்பில் ரூ. 2.5 கோடி பரிசு, 'குரூப்-1' அரசு வேலை, 1000 சதுர அடி பரப்பளவில் ஒரு வீட்டு மனை வழங்கப்பட்டது.

சண்டிகர் திரும்பிய அமன்ஜோத் கவுர், ஹர்லீன் தியாலுக்கு, பஞ்சாப் மாநில அரசு சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின் இருவரையும் திறந்தவெளி வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷுக்கு, சொந்த ஊாரான சிலிகுரியில், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் கோல்கட்டாவில் இன்று நடக்கவுள்ள பாராட்டு விழாவில் அவருக்கு தங்க முலாம் பூசப்பட்ட பேட், பந்து வழங்கப்பட உள்ளது. இதில் சவுரவ் கங்குலி, ஜூலான் கோஸ்வாமி கையெழுத்து இடம் பெற்றிருக்கும்.

Advertisement