கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை

விஜயநகரா: ''கரும்பு விவசாயிகளுக்கு 3,300 ரூபாய் ஆதரவு விலை வழங்கா விட்டால், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று முதல்வர் சித்தராமையா எச்சரித்து உள்ளார்.

விஜயநகரா ஊவினஅடஹள்ளியில் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:

பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைத்தது பற்றி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., தயானந்தாவிடம் கேட்டு தகவல் பெற்று உள்ளேன். அவர் விடுப்பில் சென்று உள்ளார்.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் நாளை (இன்று) போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்வோம்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பெங்களூரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிகழ்ச்சியில் பல விஷயங்கள் பற்றி பேசி உள்ளார். அவர் பேசிய அனைத்திற்கும், எங்களால் பதிலளிக்க முடியாது. அரசு இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கட்டுப்பாடு இல்லை. தனியார் அமைப்புகள் என்று குறிப்பிட்டு உள்ளோம். அரசு உத்தரவை பா.ஜ., தவறாக புரிந்து கொண்டால், எங்களால் என்ன செய்ய முடியும்.

நீதிமன்ற உத்தரவின்படி தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடக்கும். கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு விலையாக 3,300 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இதனை மீறும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கனமழையால் 11 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சேதம் அடைந்து உள்ளன. விவசாயிகளுக்கு கூடிய விரைவில் இழப்பீடு வழங்கப்படும். அமைச்சர வை மாற்றத்தின் போது, வால்மீகி சமூகத்திற்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement