குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் அவசியம் இருக்க வேண்டும்! மனு அளித்த பல்லடம் நபர்: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
அடிப்படை வசதி இல்லை சுண்டமேடு பகுதி மக்கள்:
வீரபாண்டி கிராமம், சுண்டமேடு, அம்பேத்கர் நகரில், 300 குடும்பங்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறோம். எங்கள் பகுதியில், சரியான சாக்கடை கால்வாய் வசதி, தார் சாலைகள் அமைக்கப்படவில்லை. குடிநீர் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை; குடிநீரில் கழிவு கலந்து வருகிறது.
மயானத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. அம்பேத்கர் நகரிலிருந்து, இடுவம்பாளையம் அரசு பள்ளி செல்ல பஸ் வசதி இல்லை. 41, 53 ஆகிய இரண்டு வார்டுகளாக உள்ளதால், எந்த கவுன்சிலரிடம் முறையிடுவது என்றும் தெரியவில்லை. தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
கால்வாய் கட்டப்படுமா? அபிராமி நகர் பகுதி மக்கள்:
திருப்பூர் மாநகராட்சி, 58வது வார்டு, கே.செட்டிபாளையம், அபிராமி நகரில், 200 வீடுகள் உள்ளன. மொத்தமுள்ள ஐந்து வீதிகளில், சில வீதிகளில் மட்டும் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது; மற்ற வீதிகளில் கட்டப்படவில்லை. கட்டுமான பணிகளின் தரம் குறைவாக உள்ளது. முறைகேடும் நடந்துள்ளது.
முறையான திட்டமிடல் இன்றி, வடிகால் கட்டுமான பணி என்கிற பெயரில், மக்களின் வரிப்பணத்தை வீணடித்துவிட்டனர். கழிவுநீர் வெளியேற்றத்துக்கு முறையான வசதிகள் ஏற்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
குடிநீர் சப்ளை அவசியம் பாலாஜி நகர் பொதுமக்கள்:
பல்லடம் தாலுகா, 63 வேலம்பாளையம், ஸ்ரீவாரி கார்டன், ஸ்ரீபாலாஜி நகர் பகுதியில், 100 குடும்பங்கள், 15 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், சாலைகள், கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளன. அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன.
தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பணிமுடிந்து திரும்புவோர், விஷ ஜந்துக்களுக்கு அஞ்ச வேண்டியுள்ளது. தண்ணீர் வினியோகமும் சரியாக இல்லை. புதிய தார்சாலைகள் போடவேண்டும்; மின் விளக்குகள் பொருத்த வேண்டும். வாரம் ஒருமுறையாவது குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
மயானத்தில் குப்பை மலை கஞ்சம்பாளையம் பகுதி மக்கள்:
திருப்பூர், கஞ்சம்பாளையத்தில், நுாறு குடும்பங்கள், வசித்து வருகிறோம். எங்கள் மூதாதையர்களை அடக்கம் செய்த மயானத்தில், மாநகராட்சியின் இரண்டாம் மண்டலத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டிவருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி நிர் வாகம், குப்பையை அகற்றவேண்டும்; மயானத்துக்கு கம்பிவேலி அமைத்து பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
சிறுவர்களுக்குதுன்புறுத்தல் திருப்பூர் மாவட்ட த.வெ.க. ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார்:
திருப்பூரில், சிக்னல் பகுதிகளில் சிறுவர்கள், முதியவர்களை பிச்சை எடுக்க வைக்கின்றனர். போக்குவரத்து நெரிசலான சாலைகளில், வெயிலின் தீவிரத்திலும், மனிதாபிமானமற்ற முறையில், சிறுவர், முதியவர்களை பிச்சை எடுக்க வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறுவர், முதியவர்களை உடனடியாக மீட்கவேண்டும்.
மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மையம், சிறுவர் நலக்குழு மற்றும் சமூக நலத்துறை வாயிலாக, தங்குமிடம், உணவு, மருத்துவம், கல்வி வழங்கி, பாதுகாக்க வேண்டும். பிச்சை எடுப்போரை ஊக்குவிக்க கூடாது என, பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அடிக்கடி விபத்துகள் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு:
இடுவாய் ஊராட்சி, பாரதிபுரத்தில், ஆட்டையாம்பாளையம் ரோட்டிலுள்ள, வி.ஐ.பி., நகரில் 15 ஆண்டுகளாக தார்சாலை வசதி செய்யப்படவில்லை. இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சமீபத்தில் ஒரு பெண் மற்றும் பால் வியாபாரி ஆகியோர், அடுத்தடுத்து விபத்தில் சிக்கி உடல் பாதிக்கப்பட்டனர். தார்சாலை அமைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
கலெக்டர் மீதே புகார்: பல்லடத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், அளித்த மனு:
கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடக்கும் குறைதீர் கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும், கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு அளிக்க வருகின்றனர். ஆனால், பெரும்பாலான குறைகேட்பு கூட்டங்களில், கலெக்டர் பங்கேற்பதில்லை அல்லது சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால், கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். வரும் நாட்களிலாவது, குறைகாப்பு கூட்டங்களில் கலெக்டர் முழுமையாக பங்கேற்று, மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
மகனை காப்பாற்ற முயன்ற தாய் அடித்து கொலை
-
கோலாரில் விளையாட்டு போட்டியில் மாணவ - மாணவியர் அசத்தல்
-
'பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுமியருக்கு பாதுகாப்பு வழங்குங்கள் '
-
தோழி இறந்ததால் சிறுமி தற்கொலை
-
மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
-
மக்கள் பிரதிநிதிகளுக்கு 'செக்' லோக் ஆயுக்தா நீதிபதி விளக்கம்