மகனை காப்பாற்ற முயன்ற தாய் அடித்து கொலை

ஷிவமொக்கா: முன்விரோதத்தில் மகனை தாக்கிய போது, காப்பாற்ற முயன்ற தாய் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஷிவமொக்கா தாலுகா தும்மள்ளி கிராமத்தின், சித்தேஸ்வரா லே - அவுட்டில் வசிப்பவர் மஞ்சுநாத். இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பைக்கில் சென்றார். பைக்கை மறித்த தும்மள்ளி கிராமத்தின் ஹரிஷ், நாகேஷ் ஆகியோர் அவரை கல்லால் தாக்கினர். இதனால், மஞ்சுநாத் தலையில் ரத்தம் வழிந்தது.

இதை பார்த்த அப்பகுதியில் வசிக்கும் கங்கம்மா, 45 என்பவர், மஞ்சுநாத்தின் காயத்தில் மஞ்சள் துாள் தடவினார். இதனால் கோபம் அடைந்த ஹரிஷ், நாகேஷ், கங்கம்மாவிடம் தகராறு செய்தனர். அவர்களை, கங்கம்மா மகன் ஜீவன் தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஜீவனை, இருவரும் மரக்கட்டையால் தாக்கினர். மகனை காப்பாற்ற முயன்ற கங்கம்மாவையும், கட்டையால் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார். ஹரிஷ், நாகேஷை துங்காநகர் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கங்கம்மாவின் உறவினர் வீட்டில் ஹரிஷ், நாகேஷ் வாடகைக்கு இருந்துள்ளனர். வாடகை பணம் கொடுக்காத விஷயத்தில், அவர்கள் இருவருக்கும், ஜீவனுக்கும் பிரச்னை இருந்தது. இதனை மனதில் வைத்தே, கங்கம்மாவை கொன்றது தெரிய வந்தது.

Advertisement