நாட்டை உலுக்கிய நிதாரி கொலை; கடைசி வழக்கில் இருந்தும் சுரேந்தர் கோலியை விடுவித்தது சுப்ரீம்கோர்ட்

6

புதுடில்லி; நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலைகள் வழக்கில் சுரேந்தர் கோலிக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரே வழக்கையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளதால் அவர் விரைவில் விடுதலை ஆகிறார்.

2006ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் நொய்டாவில் 31வது செக்டாரில் உள்ள பல ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் திடீரென மாயமாகினர். இந்த வரிசையில் பாயல் என்ற இளம்பெண் காணாமல் போக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.

பல்வேறு கோணங்களில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், 31வது செக்டாரில் உள்ள பங்களா ஒன்றின் காவலாளி சுரேந்தர் கோலி என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் வேலைபார்த்து வந்த பங்களா வளாகத்திலும், அதன் அருகில் உள்ள கால்வாயிலும் அடுத்தடுத்து சடலங்கள் மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 26 மண்டை ஓடுகள் கிடைக்க, இந்த வழக்கு நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது.

இதையடுத்து, சிபிஐ விசாரணை தொடங்க, வழக்கில் பங்களாவின் உரிமையாளரும், தொழிலதிபருமான மொஹிந்தர் சிங் புந்தேர், சுரேந்தர் கோலி இருவரும் பெண்கள், குழந்தைகளை கொன்று, சடலத்துடன் தவறான உறவு கொண்டது தெரியவந்தது.

சிபிஐ விசாரணையில், மொஹிந்தர் சிங் புந்தேர் மீது 6 வழக்குகளும், கோலி மீது 13 வழக்குகளும் பதிவாகின. 2007ம் ஆண்டு ஜூலையில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டின் போது அலகாபாத் ஐகோர்ட் இருவரையும் விடுவித்தது. 12 வழக்குகளில் விடுதலை பெற்ற கோலி மீது ஒரேயொரு வழக்கு மட்டும் பாக்கி இருந்தது.

சுப்ரீம்கோர்ட்டில் அரசு தரப்பு மற்றும் சிபிஐயின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆகையால் மொஹிந்தர் அனைத்து வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட, சுரேந்தர் கோலி மட்டும் வேறு ஒரு வழக்கில் சிறையில் இருந்தார்.

இந் நிலையில், எஞ்சிய வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுரேந்தர் கோலி மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். 12 வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை முன் வைத்து அவர் இந்த கடைசி வழக்கில் இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தமது மனுவில், தம்மை குற்றவாளியாக்க முன் வைக்கப்பட்ட அதே ஆதாரங்கள், பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட மற்ற வழக்குகளில் நம்பகத்தன்மை அற்றவையாக கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் நீதிபதி விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கோலியின் தண்டனையை உறுதி செய்து 15.02.2011ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பும். அதனை தொடர்ந்து அவரின் மறு ஆய்வை தள்ளுபடி செய்த 28.10.2014ம் ஆண்டு உத்தரவும் திரும்ப பெறப்பட்டு ரத்தும் செய்யப்பட்டுள்ளன.

கடைசி வழக்கிலும் விடுவிக்கப்பட்டு விட்டதால் சுரேந்தர் கோலி, விரைவில் வெளியில் வருகிறார்.

Advertisement