காதலை கண்டித்தார் தந்தை மிரட்டல் விடுத்தார் மகள்
நாகர்கோவில்: குளச்சல் அருகே காதலனுடன் வீட்டில் இருந்த மகளை கண்டித்த தந்தைக்கு மகள் போக்சோ புகார் கொடுப்பேன் என மிரட்டல் விடுத்தது போலீசாரையே அதிர்ச்சி அடையச் செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு 17 வயதில் மகளும் 13 வயதில் மகனும் உள்ளனர். மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை தந்தை தட்டி கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இதுபோல அந்த இளைஞர் உணவு வாங்கி வந்து வீட்டுக்குள் இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் அங்கு வந்த மாணவியின் தந்தை இருவரிடமும் தகராறு செய்து அவர்களை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.
'எங்களை போலீசில் பிடித்துக் கொடுத்தால் உங்கள் மீது நான் போக்சோ புகார் கொடுப்பேன்' என்று மகள் மிரட்டல் விடுத்தார். இதனால் தந்தை அங்கிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.
பின்னர் தாயை அழைத்து மாணவியை அவரிடம் ஒப்படைத்த னர்.
இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்னை காரணமாக மாணவியின் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்கின்றனர்.