குழந்தைகள் அதிகம் சாப்பிடும் 'பெங்கால் வெஜ் சாப்ஸ்'

- நமது நிருபர் -

குழந்தைகளுக்கு என்ன டிபன் செய்யலாம் என யோசிக்கிறீர்களா. 'பெங்காலி வெஜ் சாப்ஸ்' செய்து கொடுங்கள்; செய்வதும் எளிது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்

 உருளைக்கிழங்கு - 2

 பீட்ரூட் - 1

 கேரட், பீன்ஸ், பட்டாணி - 1 கப்

 வெங்காயம் - 1

 பச்சை மிளகாய் -3

 வேர்க்கடலை - 1 ஸ்பூன்

 சோம்பு - 1 ஸ்பூன்

 கரம் மசாலா - 1 ஸ்பூன்

 சீரக துாள் - 1 ஸ்பூன்

 தனியா துாள் - 1 ஸ்பூன்

 உலர்ந்த மிளகாய் - 2

 உப்பு - தேவையான அளவு

 சர்க்கரை - அரை ஸ்பூன்

 பிரட் துாள் - 1 கப்

 மைதா மாவு - 3 ஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை முதலில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், பீன்சை பொடியாக நறுக்கி கொள்ளவும். இந்த காய்கறிகளுடன் பட்டாணி, உலர்ந்த மிளகாய் சேர்த்து குக்கரில் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வெந்த பின் நீரை வடித்து, தனியாக வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, மிதமான தீயில் வேர்க்கடலையை போட்டு வறுக்கவும். அதன்பின் தோலை நீக்கி, பொடித்து கொள்ளவும். இதில் வேக வைத்த காய்கறிகள், சோம்பு, சீரக துாள், கரம் மசாலா, தனியா துாள், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில், மூன்று ஸ்பூன் மைதா மாவுடன், ஆறு ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து வைக்கவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை, கட்லெட் வடிவில் ரோல் செய்து கொள்ளவும். இதை முதலில் மைதா மாவு கலவையில் முக்கியெடுத்து, அதன் பின் பிரட் துாளில் இரண்டு பக்கமும் பிரட்டவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட்களை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்தால், சுவையான பெங்காலி வெஜ் சாப்ஸ் தயார். காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும், இதை விரும்பி சாப்பிடுவர். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும்.

Advertisement