போலி பேராசிரியர்கள் மோசடியில் திமுகவினர் கல்லூரி மீது எப்ஐஆர் போடாதது ஏன் : அறப்போர் இயக்கம் கேள்வி

4


சென்னை: சென்னை அண்ணா பல்கலை. போலி பேராசிரியர்கள் மோசடி புகாரில் ஒரு கல்லூரி மீது மட்டுமே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், திமுகவினர் நடத்தும் கல்லூரிகள் மீது எந்த மேல் நடவடிக்கையும் இல்லை என்றும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.

தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில், 353 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் ஒரே நேரத்தில் முழு நேர பேராசிரியர்களாக பணிபுரிகின்றனர் என்பது அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு. அதாவது இல்லாத பேராசிரியரை இருப்பதாக கணக்கு காட்டி மோசடி செய்கின்றனர் எனவும், கல்லூரி நிர்வாகம் மட்டுமின்றி அண்ணா பல்கலை நிர்வாகமும் உடந்தையாக இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.

விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. 2024-25ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற விண்ணப்பித்த 124 கல்லூரிகளின் பேராசிரியர்கள் பட்டியல் இணைக்கப்பட்டது. இதில் ஒரே பெயரைக் கொண்ட 470 பேர் வெவ்வேறு, வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு கல்லூரியில் முழுநேரமாக பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசிரியாக பணியாற்றவே முடியாது. அப்படி இருந்தால், அது சட்டப்படி மோசடி ஆகும். இந்த முழுநேர பேராசிரியர்களின் எண்ணிக்கையை பொறுத்துத் தான் அந்தந்த கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அனுமதியே அளிக்கப்படுகிறது.

மோசடி வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு எப்ஐஆரும் போடப்பட்டது. தற்போது அந்த எப்ஐஆரில் உள்ள விவரங்கள் என்ன என்பதை அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கிறது. அதில் 11 கல்லூரிகளில் பேராசிரியராக மாரிச்சாமி என்பவர் பணியாற்றுவதாக மோசடியாக கூறி அங்கீகாரம் பெறப்பட்டு உள்ளது.

இந்த கல்லூரிகள் அனைத்தும் அரசியல் பின்புலத்தில் உள்ளவர்கள் நடத்தும் கல்லூரிகள் ஆகும். அதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் விஐபிக்களும் அடக்கம்.

இந் நிலையில், அறப்போர் இயக்கம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது. அதில் 11 கல்லூரிகள் மீது மோசடி புகார் எழுந்துள்ள நிலையில் திமுகவினர் நடத்தும் கல்லூரிகள் மீது எப்ஐஆர் பதியவில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கோவையில், அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மகன் நடத்தும் இன்ஜினியரிங் கல்லூரி மீது மட்டுமே எப்ஐஆர் பதியப்பட்டு உள்ளது.

எஞ்சிய 10 கல்லூரிகளில் திமுகவின் முக்கிய புள்ளிகள் நடத்தும், 3 கல்லூரிகள் மீது ஏன் எப்ஐஆர் பதியப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது. ,இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு;

இதை எல்லாம் யாருமே கண்டுபிடிக்க மாட்டார்கள் என தொடர்ந்து பல வருடங்களாக இந்த மோசடியை அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். இந்த மோசடி நடக்கிறது என்று தெரிந்தும் அரசாங்கங்கள் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தன. தற்பொழுது ஆதாரங்களுடன் வசமாக சிக்கி இருக்கிறார்கள்.

இதில் மாரிச்சாமி என்ற பேராசிரியர் பெயர் FIRல் இடம்பெற்றுள்ளது. இவருடைய பெயர் 11 கல்லூரிகளில் பேராசிரியராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது இவரது பெயரை பயன்படுத்தி 11 தனியார் பொறியியல் கல்லூரிகள் மோசடி செய்து கல்லூரிக்கு அங்கீகாரம் வாங்கி இருக்கிறார்கள்.

இதில் 1 கல்லூரி மீது மட்டும் தான் தற்பொழுது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 10 கல்லூரிகளில் 3 கல்லூரிகள் ஆளுங்கட்சியான திமுக நிர்வாகிகள் நடத்தும் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் 11 கல்லூரிகள் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை? திமுகவினர் கல்லூரிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறதா?

இவ்வாறு அறப்போர் இயக்கம் தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

தமது பதிவில் அறப்போர் இயக்கம், எப்ஐஆரில் இடம்பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள் எவை என்ற பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:

தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, பெரம்பலூர்

எம்ஆர்கே இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, கடலூர்

ஏர்ஆர்ஜே காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருவாரூர்

(மேற்கண்ட 3 கல்லூரிகளும் திமுக நிர்வாகிகள் நடத்தும் கல்லூரிகள்)

ஏகேடி மெமோரியல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி. கள்ளக்குறிச்சி

ஏஞ்சல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருப்பூர்

பாத்திமா மைக்கேல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை

கதிர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோயமுத்தூர் (இந்த கல்லூரி மட்டும் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது-செங்கோட்டையன் மகனுக்குச் சொந்தமான கல்லூரி)

மீனாக்ஷி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சென்னை

ரங்கநாயகி வரதராஜ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், விருதுநகர்

ராஸ் (Rrase) காலேஜ் ஆப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்

ஸ்ரீமுத்துகுமரன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்

Advertisement