பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் விலக்கப்படுவதை ஆதரிக்கிறேன்; தலைமை நீதிபதி கவாய் உறுதி

5

அமராவதி: பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் விலக்கப்படுவதை ஆதரிப்பதாக சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறி உள்ளார்.

ஆந்திராவின் அமராவதியில், இந்தியா மற்றும் 75வது ஆண்டில் இந்திய அரசியலமைப்பு என்ற நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;

இடஒதுக்கீட்டை பொறுத்தவரையில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி உடைய குழந்தையை, ஒரு ஏழை விவசாய தொழிலாளியின் சந்ததியினருடன் ஒப்பிட முடியாது. இந்திரா சாவ்னி வழக்கின் தீர்ப்பில் காணப்படுவது போல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பொருந்தக்கூடிய கிரீமிலேயர், பட்டியல் ஜாதியினருக்கும் பொருந்த வேண்டும் என்று கூறினேன்.

அந்த விஷயத்தில் எனது தீர்ப்பு பரவலாக விமர்சனத்துக்கு ஆளானது. ஆனால் நீதிபதிகள் பொதுவாகவே தங்கள் தீர்ப்புகளை நியாயப்படுத்தக் கூடாது என்று கருதுகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் நான் ஓய்வு பெற போகிறேன். தலைமை நீதிபதியாக நான் பொறுப்பேற்ற பின்னர் எனது முதல் விழா மஹாராஷ்டிராவில் நடைபெற்றது. எனது கடைசி விழா (நவ. 24ல் கவாய் ஓய்வு பெறுகிறார்) ஆந்திராவின் அமராவதியில் நடைபெறுகிறது.

நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சமத்துவம் தருகிறது போன்ற விஷயங்கள் வேகம் பெற்று வருகிறது. அவர்களுக்கு தரப்பட்ட பாகுபாடானது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பானது நிலையானது அல்ல. அது எப்போதும் பரிணாம வளர்ச்சி அடைந்து, இயற்கையாக, ஒரு அதிநவீன ஆவணமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். ஏன் என்றால் பிரிவு 368 அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை வழங்குகிறது.

அரசியலமைப்பை திருத்துவதற்கான அதிகாரங்கள் தாராளமாக இருக்கின்றன என்பதற்காக ஒருபுறமும், சில திருத்தங்களுக்கு மாநிலங்களும், பார்லி.யில் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காக மறுபுறமும் அம்பேத்கர் விமர்சிக்கப்பட்டார்.

அரசியலமைப்பு சட்ட வரைவு மசோதாவை சமர்ப்பிக்கும் போது அம்பேத்கர் ஆற்றிய உரைகள், சட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய முக்கிய உரைகளாகும்.

சமத்துவம் இல்லாத சுதந்திரம், ஒரு மனிதன் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்தை பறித்துவிடும். சமூக மற்றும் பொருளாதாரத்தில் ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் அவசியம்.

இந்திய அரசியலமைப்பின் காரணமாகத்தான் இங்கு பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஜனாதிபதிகள் இருந்தனர். இப்போது ஜனாதிபதி பதவியில் இருப்பவர் ஒரு பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

அமராவதியில் ஒரு அரை குடிசைப் பகுதியில் ஒரு நகராட்சி பள்ளியில் இருந்து எளிய பின்னணியில் இருந்து வந்துள்ள நான், நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியை அடைந்ததற்கும், நாட்டை கட்டி எழுப்புவதில் எனது பங்களிப்பை அளித்ததற்கும் இந்திய அரசியலமைப்பே காரணமாக இருந்தது. நம் நாட்டின் அரசியலமைப்பானது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களில் நிற்கிறது.

இவ்வாறு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கவாய் உரையாற்றினார்.

Advertisement