2028ம் ஆண்டில் சந்திரயான்-4 ஐ ஏவ இலக்கு; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
புதுடில்லி: நிலவில் இருந்து மண் மற்றும் பாறைகளின் மாதிரியை கொண்டுவரும் மிகவும் சிக்கலான 'சந்திரயான் 4' திட்டத்தை 2028ம் ஆண்டில் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: அறிவியல், தொழில்நுட்பம், தொழில்துறை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான 'ககன்யான்', திட்டமிட்டபடி 2027ம் ஆண்டு நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டு நிறைவடைவதற்குள் மேலும் ஏழு விண்கலன்களை ஏவ திட்டமிட்டு இருக்கிறோம்.அதற்கான திட்டங்களில் பல்வேறு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி திட்டங்கள், வர்த்தகத் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஆகியவையும் அடங்கும்.
இந்தியாவில் உற்பத்தியாகிவரும் பிஎஸ்எல்வி திட்டம் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நிலவில் இருந்து மாதிரியை கொண்டுவரும் மிகவும் சிக்கலான திட்டமான 'சந்திரயான் 4' திட்டத்தை 2028ம் ஆண்டில் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்தத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா இதுவரை மேற்கொள்ளாத சவாலான நிலவு பயணமாகும்.
மற்றொரு முக்கியமான விண்வெளித் திட்டம் லூப்பெக்ஸ். அது, இஸ்ரோவும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு அமைப்பான ஜேக்சாவும் இணைந்து நடத்தும் நிலவு ஆய்வுத் திட்டமாகும்.
அடுத்த மூன்று ஆண்டிற்குள், விண்கலன் உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இஸ்ரோ கூடுதல் விண்வெளித் திட்டங்களை மேற்கொண்டு வருவதால் அதற்கு ஈடுகொடுக்க மின்கலன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2035ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்ட இந்திய விண்வெளி நிலையத்திற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு தற்போது, 2 சதவீதமாக உள்ளது. மேலும் 2030ம் ஆண்டுக்குள் இதை 8 சதவீதமாக உயர்த்த இஸ்ரோ செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போது, 8.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. இது 2033ம் ஆண்டுக்குள் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் உலக விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 630 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
இஸ்ரோ பணி சிறக்க வாழ்த்துக்கள்மேலும்
-
இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
-
பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மகன் சுட்டுக்கொலை: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்
-
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை; கத்தார் பிரதமர் அல் தானியை சந்தித்தார் ஜெய்சங்கர்
-
விக்சித் பாரத் இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றும் சிஏஜி; துணை ஜனாதிபதி பெருமிதம்
-
தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
-
போலி செய்தி பரப்பினால் நடவடிக்கை; காங்., பெண் நிர்வாகியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை