பீஹார் தேர்தல் வெற்றி: நிதிஷ் நீடிக்க ஆதரவு!

5

பீஹார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் - லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி மட்டும் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சியான மஹாகட்பந்தன் கூட்டணி, 35 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்துள்ளது. இதர கட்சிகள் ஆறு இடங்களை பிடித்துள்ளன. அதே நேரத்தில், 2020 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், தே.ஜ., கூட்டணி 80 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி வாயிலாக, முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எல்லாம், தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். 140க்கும் மேற்பட்ட தொகுதிகளை அக்கூட்டணி பிடிக்கும் என்று தான் கூறியிருந்தன. ஆனால், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை தே.ஜ., கூட்டணி பிடித்திருப்பது, பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

பீஹாரில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன் வாயிலாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, சுய தொழில் துவங்க, தலா, 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் இணைந்து சாதனை படைக்கும் பெண்களுக்கு, கூடுதலாக, 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தது, தே.ஜ., கூட்டணிக்கு பெருமளவு கைகொடுத்து உள்ளது.

பல தொகுதிகளில் மகளிர் ஓட்டுகள் அதிக அளவில் பதிவாகி, அதுவே ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற காரணமாகி உள்ளது என்றால் மிகையில்லை.

அதே நேரத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராகவும், ஓட்டு திருட்டு குற்றஞ்சாட்டியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுலும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவும் மேற்கொண்ட தீவிர பிரசாரங்களும், நடத்திய பேரணிகளும் பெரிய அளவில் பலன் தரவில்லை. பீஹார் வாக்காளர்கள் அவற்றை புறந்தள்ளி விட்டனர் என்றே சொல்லலாம்.

மேலும், பீஹாரில் உள்ள உயர் ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் தலித் ஓட்டுகளை ஒன்றிணைப்பதில் தே.ஜ., கூட்டணி திறமையாகச் செயல்பட்டதும், முஸ்லிம்கள் மற்றும் யாதவ இன மக்களின் ஓட்டுகள் பிரிந்ததும், எதிர்க்கட்சிகள் படுதோல்விக்கு காரணமாகி விட்டன. ஜாதி ரீதியான ஓட்டுகள் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையையும் பொய்யாக்கி விட்டது.

'கடந்த 2020 சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றாலும், அது பெரிய வெற்றியல்ல. எனவே, அப்போது நிகழ்ந்த தவறுகளை எல்லாம், இந்த தேர்தலில் தே.ஜ., கூட்டணி சீர் செய்ததுடன், முன்னதாகவே கூட்டணி பேச்சுகள் மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து களம் கண்டதும், திறமையான பூத் அளவிலான மேலாண்மையும் நல்ல வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது' என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

அத்துடன், பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுவும், அவரது மனைவி ரப்ரி தேவியும் மாறி மாறி, 15 ஆண்டுகள் நடத்திய ஆட்சியில், தொடர் படுகொலை, பணத்துக்காக கடத்தல், மோசமான சுகாதாரம், மாநில வளர்ச்சி வீழ்ச்சி என, பல வகையிலும் மக்கள் கஷ்டங்களை அனுபவித்த சூழ்நிலையே இருந்தது.

இதனால், அவர்களது ஆட்சியை, 'காட்டாட்சி' என்றே பலரும் விமர்சித்தனர். அந்த காட்டாட்சி என்ற வார்த்தையை, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர், தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி, மக்களுக்கு பழைய விஷயங்களை நினைவுபடுத்தியதும், அவர்களின் வெற்றியை எளிதாக்கியுள்ளது.

மொத்தத்தில், 'முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும்' என்ற எண்ணத்தில் மக்கள் அளித்த அமோக ஆதரவே, இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மக்களின் நம்பிக்கையை, புதிதாக அமையவுள்ள தே.ஜ., கூட்டணி அரசு காப்பாற்றும் என நம்பலாம்.

Advertisement