வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தலா? வனத்துறை மறுப்பு: வெளிவருமா உண்மை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வனப்பகுதியில் பலவகை மரங்கள் வெட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இப்புகாரை வனத்துறை மறுத்துள்ள நிலையில், உயர் அதிகாரிகள் விசாரணை செய்து உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேத்துமடை வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில், சீமை கருவேல, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி வழங்கியது. அதன்பேரில் ஏலம் எடுத்த நபர், மரங்களை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டார்.

இந்நிலையில், வனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பரப்பில் மரங்கள் வெட்டப்படுவதாகவும், குறிப்பிட்ட மரங்களுடன் கூடுதலாக, பல வகை மரங்களும் வெட்டி கடத்தப்படுவதாகவும், வெட்டிய மரத்தின் வேர் பகுதி தோண்டி அகற்றப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து 'ட்ரோன்' வீடியோ, போட்டோ, சமூகவலைதளங்களில் பரவி, வனப்பகுதி அழிவதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை மறுத்துள்ள நிலையில், 'ட்ரோன்' வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

வனச்சரகர் ஞானபாலமுருகன் கூறியதாவது:

பொள்ளாச்சி வனச்சரகம், சேத்துமடை மேற்கு பிரிவு போத்தமடை சுற்று பகுதியில் பெரும்பாலும் சீமைகருவேல, யூகலிப்டஸ் மற்றும் புளிய மரங்களாகவே உள்ளன.

இதர மரங்கள் மிக குறைந்த அளவில் மட்டுமே உள்ளன. 50 ெஹக்டேருக்கு மட்டுமே மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதில், மீதம் உள்ள, ஏழு ெஹக்டேர்கள் அகற்றப்படுகிறது.

இது குறித்து தகவறான செய்திகள் வெளிவருகின்றன. ஒரு சிலர் பணம் வனக்குத்தகைதாரரிடம் கேட்டதாக தெரிகிறது.மேலும், வன எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 'ட்ரோன்' வாயிலாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் படம் எடுக்க அனுமதியில்லாத போது, படம் எடுத்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, கூறினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வனப்பகுதிக்குள் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. வனத்தில் என்ன நடந்தாலும் அதிகாரிகள் சொன்னால் மட்டுமே தகவல் வெளியே வருகிறது.

இச்சூழலில், மரம் வெட்ட அனுமதி கொடுத்ததும், அனுமதியை மீறி மரம் வெட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை மறுத்துள்ள வனத்துறை அதிகாரிகள், 'ட்ரோன்' வாயிலாக வீடியோ எடுத்தது குறித்து விசாரிக்கப்படுகிறது என்பதை மட்டும் கூறுகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement